காலாண்டை கடந்து சிந்திக்க வேண்டும்

தினமலர்  தினமலர்
காலாண்டை கடந்து சிந்திக்க வேண்டும்

இது, காலாண்டு நிதி அறிக்கைகளின் காலம். முதலில் முன்னணிநிறுவனங்களின் காலாண்டு கணக்குகள் வெளிவரும். பின், மற்ற நிறுவன அறிக்கைகள் வெளியிடப்படும்.முதலில் வெளிவரும் நிறுவன கணக்குகள், நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைவது வழக்கம்.

தம் நிறுவனத்தின் எதிர்காலத்தை பற்றி அதிக நம்பிக்கை கொண்ட நிறுவனங்கள் தான், முதலில் அறிவிப்பு வெளியிடுவார்கள்.இதுவே சற்றே மந்தமாகவோ, அல்லது மோசமாகவோ அமையும் என கருதும்பட்சத்தில், அறிவிப்பை தள்ளி போட்டு, அளிக்கப்பட்ட அவகாசத்தின் இறுதியில் வெளியிடுவது நிறுவனங்களின் வழக்கம்.கடந்த இரு வாரங்களில் வந்த முடிவுகள், எதிர்ப்பார்த்தபடியோ, அல்லது சற்றே குறைவாகவோ அமைந்துள்ளன. எந்த நிறுவனமும், சந்தையின் எதிர்பார்ப்புகளை விஞ்சவில்லை.அதேசமயம், குறையும் பொருளாதார வளர்ச்சியின் தெளிவான வெளிப்பாடு, இதுவரை வந்த நிறுவன முடிவுகளில் அவ்வளவாக தெரியவில்லை. அந்தந்த துறை சார்ந்த பிரச்னைகள் தான், அவர்களின் காலாண்டு நிதி அறிக்கைகளில் பிரதிபலிக்கின்றன. இந்த சூழலில், சந்தையில் நாம் கண்ட உற்சாகம், மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் சார்ந்த மனமாற்றம், சற்றும் எதிர்பாராத வகையில் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.சென்ற வாரம் சந்தைக்கு கிடைத்த புதிய உற்சாகம் நிலைக்குமா என்பதை, வரும் வாரங்களில் தான், நாம், தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.போகப் போக, வெளிவரும் நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள், சந்தை விரும்பும் வண்ணம் அமைய வாய்ப்பில்லை என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.முன்னணி நிறுவனங்களின், காலாண்டு கணக்குகள் சற்றே மந்தமாகவே அமையும் சூழ்நிலையில், சந்தை மாறுதலை தேடி நகர்வது, பலருக்கு புதிய சிக்கலை தந்து உள்ளது.நிறுவன நிதி நிலையையும், செப்டம்பர் காலாண்டையும் கடந்து, சந்தை செல்லுமா என்ற தெளிவு, யாருக்கும் இல்லை. பெருவாரியான முதலீட்டு வியூகங்கள், இன்னும் அச்ச உணர்வுடனே எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், பொருளாதார நம்பிக்கை மற்றும் அதிவேக சீர்திருத்தங்கள் சார்ந்த முதலீட்டு வியூகங்கள் எதுவுமே அமைக்கப்படவில்லை. வரும் வாரங்களில், சீர்திருத்தங்கள் சார்ந்த சந்தை எதிர்பார்ப்புகள் மீண்டும் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது.இனி வரும் வாரங்களில் வெளிவரப்போகும் கொள்கை அறிவிப்புகள், அன்னிய முதலீட்டு அறிவிப்புகள், பொதுத் துறை பங்கு விற்பனை அறிவிப்புகள் மற்றும் அன்னிய முதலீட்டு அளவீடுகள், சந்தையில் புதிய முதலீட்டு வியூகங்களை அமைக்க, உள்நாட்டு முதலீட்டாளர்களை நிர்ப்பந்திக்க கூடிய வாய்ப்பு தெரிகிறது.இப்படி, சந்தையின் மனநிலையில் மாற்றம் ஏற்பட, பல காரணங்கள் இருக்கும் போது, சந்தை, இந்த காலாண்டை கடந்து சிந்திக்க வேண்டி வரும். அதற்கு தயார்படுத்திக் கொள்ள, அதிக நேரமில்லை என்றே தோன்றுகிறது.

மூலக்கதை