ராஞ்சியில் சாதிக்குமா இந்தியா: மூன்றாவது டெஸ்ட் துவக்கம் | அக்டோபர் 17, 2019

தினமலர்  தினமலர்
ராஞ்சியில் சாதிக்குமா இந்தியா: மூன்றாவது டெஸ்ட் துவக்கம் | அக்டோபர் 17, 2019

ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ராஞ்சி போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் சாதித்த இந்தியா 2–0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை ராஞ்சியில் துவங்குகிறது.

இப்போட்டியில் சாதிக்க இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். புஜாரா, ரகானே உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சி செய்தனர். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார். முதல் இரு டெஸ்டில் இடம் பெறாத சுழல் வீரர் குல்தீப் யாதவும், பந்து வீச்சில் இறங்கினார்.

ராஞ்சி எப்படி

ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட் மட்டும் நடந்தது. கடந்த 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 603/9 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. புஜாரா (202) இரட்டை சதம், விக்கெட் கீப்பர் சகா (117) சதம் விளாசினர். ஆஸ்திரேலிய அணி இரு இன்னிங்சில் 451/10, 204/6 ரன்கள் எடுக்க போட்டி ‘டிரா’ ஆனது.

இம்முறை இந்திய அணியின் பவுலிங் படை சிறப்பாக உள்ளதால் மூன்றாவது வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை அப்படியே முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சொந்தமண்ணில் தொடர்ந்து 11 தொடர்களை கைப்பற்றி சாதித்த உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, மீண்டும் சாதிக்கும் என நம்பலாம்.

மஹராஜ் இல்லை

இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களைப் பொறுத்தவரையில் அதிக பொறுமையுடன் பேட்டிங் செய்ய வேண்டும். தென் ஆப்ரிக்க வீரர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹராஜ், தோள்பட்டை காயத்தால் மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகியது பின்னடைவு தான். அறிமுக சுழல் வீரர் ஜார்ஜ் லிண்டே களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

மூலக்கதை