ஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன்; கைது செய்ய போலீசில் புகார்

தினமலர்  தினமலர்
ஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன்; கைது செய்ய போலீசில் புகார்

கோவை: ஹிந்து கடவுள் கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை இழிவாக பேசிய சிறுமுகை காரப்பனை கைது செய்யக் கோரி கோவை மாநகர போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் உள்ள 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர் காரப்பன். இவர் கோவையில் நடந்த கருத்தரங்கில் ஹிந்து கடவுள் கிருஷ்ணரை 'பொம்பள பொறுக்கி' என்றும் 'அத்திவரதரை பரதேசி' என்றும் இழிவாக பேசிய வீடியோ வெளியானது.

இது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரப்பனுக்கு கண்டனம் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காரப்பன் மீது சிறுமுகை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடந்த இடம் கோவை மாநகர் பீளமேடு என்பதால் இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல் பீளமேடு போலீசில் நேற்று புகார் அளித்தார்.


அதில் 'வன்முறையை துாண்டும் விதமாக ஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பனை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தன் இழிவான பேச்சுக்கு காரப்பன் மன்னிப்பு கேட்கும் 32 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.

ஆனாலும் இதை ஏற்க மறுத்துள்ள ஹிந்து அமைப்பினர் 'மத நம்பிக்கையை சீர் குலைக்கும் வகையில் ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசி மன்னிப்பு கேட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட இயலாது; அதை சட்டமும் அனுமதிப்பதில்லை' என்றனர்.

மூலக்கதை