மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலமில்லை! பயிற்சியாளர், உபகரணம் எதுவுமில்லை

தினமலர்  தினமலர்
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலமில்லை! பயிற்சியாளர், உபகரணம் எதுவுமில்லை

கோவை:மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தின், பிசியோதெரபி பயிற்சி கூடத்தில், முழுநேரபயிற்சியாளர் இல்லாததால், பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கை, குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தேவையான உபகரணங்களும், பயிற்சியாளரும் இல்லாமல் தவிக்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.அலுவலகத்தில், கை, கால் குறைபாடு உடையவர்கள் பயிற்சி பெறும் வகையில், பிசியோதெரபி பயிற்சி மையமும்உள்ளது. முழுநேர பயிற்சியாளர் மற்றும் போதிய உபகரணங்கள் இல்லாததால், பிசியோதெரபி பயிற்சிக்கு, வெறும் நான்கு பேர் மட்டுமே வருகின்றனர்.
குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடு கண்டறியும், தொடக்க நிலை பரிசோதனை மையங்கள், பேச்சு பயிற்சி மையம், பெரும்பாலும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் கூறியதாவது:ஒரு சாலை விபத்துக்குப் பின், கைகள் சரிவர இயக்க முடியவில்லை. தசைப் பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், இயல்பு நிலைக்கு மாறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பிசியோதெரபிஸ்ட மையத்தில்பயிற்சி செய்து வருகிறேன்.
அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே இங்கு வருகின்றனர். ஸ்லைடிங் சீட், டிராக்சன் கிட், பிங்கர் லேடர், ஸ்டேட்டிக் சைக்கிள் உள்ளிட்ட தசைப்பயிற்சி உபகரணங்கள், நல்ல நிலையில் உள்ளன. ஆனால், எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் பழுதாகி, காட்சிப்பொருளாக மட்டும் உள்ளது.அலுவலக பணியில் இருக்கும் பயிற்சியாளர், அவ்வப்போது சில பயிற்சிகளை சொல்லித்தருகிறார். இருக்கும் இயந்திரங்கள், தெரிந்த பயிற்சிகளை நாங்களே செய்து வருகிறோம். இதனால், பல ஆண்டு பயிற்சி செய்தும், குறைபாடுகளை சரிசெய்யமுடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:இங்கு ஆடியோலாஜிஸ்ட் மூலம், குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பேச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், வட்டாரங்களில் இயங்கும் பிசியோதெரபிஸ்ட் மையங்களுக்கே, அதிகமானோர் செல்கின்றனர். அதிகமானோர் வரும் பட்சத்தில், தேவைக்கேற்ப உபகரணங்கள் பெறப்பட்டு, பிசியோதெரபி மையம்மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை