ஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்

தினமலர்  தினமலர்
ஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான பிரச்னையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 'பிரெக்சிட்' எனப்படும் இதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க பிரிட்டனுக்கு கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுடன் புதிய ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் இறுதி செய்திருந்தார்.


அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக பிரிட்டன் பார்லிமென்ட் சிறப்புக்கூட்டம் நேற்று முன்தினம் கூட்டப்பட்டது. ஆனால் புதிய ஒப்பந்தத்தை நிராகரித்ததுடன் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து பிரிட்டன் பார்லி சட்டங்களின்படி 2020 ஜன. 31 வரை அவகாசம் கேட்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்குக்கு பிரதமர் ஜான்சன் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அந்தக் கடிதத்தில் அவர் கையெழுத்திடவில்லை. இதற்கிடையே 'அக்.31ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என குறிப்பிட்டு ஜான்சன் கையெழுத்திட்டு மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.


இதற்கு பிரிட்டன் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'பார்லியையும் நாட்டின் நீதிமன்றங்களையும் மதிக்காமல் பிரதமர் செயல்பட்டுள்ளார். முதிர்ச்சி இல்லாத குழந்தை போல் செயல்படுகிறார்' என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஐரோப்பிய யூனியன் உடனான புதிய ஒப்பந்தத்துக்கு அனுமதி கேட்டு பார்லியில் மீண்டும் தீர்மானம் கொண்டு வர பிரதமர் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


இது ஒருபுறம் இருக்க ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் துாதர்கள் மூத்த அதிகாரிகள் நேற்று சந்தித்தனர். அப்போது காலக்கெடுவை நீடிக்கும் பிரிட்டன் பிரதமரின் கடிதத்தை ஏற்காமல் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்.31ம் தேதிக்குள் பிரிட்டனை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் மாறி மாறி நடந்து வருவதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை