தேர்தலில் எதிர்ப்பே இல்லை என்று முதல்வர் கூறும்போது மோடி, அமித்ஷாவை வைத்து இத்தனை பேரணி நடத்தியது ஏன்?: சிவசேனா ‘சேம்சைடு கோல்’

தினகரன்  தினகரன்
தேர்தலில் எதிர்ப்பே இல்லை என்று முதல்வர் கூறும்போது மோடி, அமித்ஷாவை வைத்து இத்தனை பேரணி நடத்தியது ஏன்?: சிவசேனா ‘சேம்சைடு கோல்’

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியை எதிர்க்க யாருமே இல்லை என்று முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறும்போது, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை வைத்து பாஜ ஏன் இத்தனை பேரணியை நடத்த வேண்டும்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்து வருவதாகவும் தேர்தலில் பாஜ கூட்டணியை எதிர்க்க யாருமே இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’ தலையங்கத்தில்  கூறப்பட்டிருப்பதாவது:தேர்தல் பிரசாரத்தில் பாஜ.வை எதிர்க்க யாருமே இல்லை என்று முதல்வர் பட்நவிஸ் கூறியிருக்கிறார். அப்படியானால், மகாராஷ்டிரா முழுவதும் பிரதமர் மோடியை வைத்து 10 பேரணிகள், அமித்ஷாவை வைத்து 30 பேரணிகள், முதல்வர் பட்நவிசை வைத்து 100 பேரணிகள் நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்கூட இதே கேள்வியைத்தான் எழுப்பி இருக்கிறார். அது தவறானது அல்ல. தேர்தல் களத்தில் எதிரிகளே இல்லை என்று பட்நவிஸ் கூறினாலும், தேர்தல் சவால்கள் இருப்பது உண்மைதான். அதனால்தான் பாஜ தலைவர்கள் இத்தனை பேரணிகளை நடத்தியுள்ளனர்.ஆதித்யா தாக்கரே தேர்தல் அரசியலில் இறங்கியிருப்பது மகாராஷ்டிரா அரசியலின் போக்கையே மாற்றப்போகிறது. சட்டப்பேரவையில் அமர்வதற்காக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் இந்த மாநிலத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்டது மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை போன்ற பிரச்னைகள் மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின்போது முதன் முறையாக எழுப்பப்பட்டன. எனினும் சாமானிய மக்கள் பிரச்னைகள் குறித்து சிவசேனாதான் பேசுகிறது. 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு, ஒரு ரூபாய்க்கு மருத்துவ பரிசோதனை போன்ற வாக்குறுதிகளை சிவசேனா அளித்துள்ளது. முதல்வர் பட்நவிஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்துக்கு என்ன செய்திருக்கிறார் என்பது தேர்தலில் பரிசோதனைக்கு உள்ளாகப்போகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை