நடிகர் விஜய்யுடன் நடிப்பது பெருமை: தேவதர்ஷினி

தினமலர்  தினமலர்
நடிகர் விஜய்யுடன் நடிப்பது பெருமை: தேவதர்ஷினி

நடிகை தேவதர்ஷினி, நடிகர் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருக்கிறார். அது குறித்து, அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது:


நானே, நடிகர் விஜய்க்கு மிகப் பெரிய ரசிகை. என்னை விட, என்னுடைய மகள் நியத்தி, நடிகர் விஜய்க்கு ரசிகையோ ரசிகை. அவர், ஏற்கனவே 96 படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பதை, எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால், விஜய் மட்டும் பாராட்டவில்லை. இந்நிலையில், நியத்தி, நடிகர் விஜய்க்குடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால், என்னோடு பிகில் பட சூட்டிங் இடத்துக்கு வருவதாகக் கூறி, ஒரு நாள் என்னுடன் வந்தார். அன்றைய தினம், மிகவும் பிசியாக சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. நடிகர் விஜய்யும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதனால், இன்றைக்கு படம் எடுப்பது சாத்தியப்படாது என்று, நியத்திடம் சொல்லி, அவரை அமைதியாக இருக்கக் கேட்டுக் கொண்டேன். அவரும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என இருந்து விட்டார். அந்த சமயம் பார்த்து, என்னை நோக்கி வந்தார் நடிகர் விஜய். உங்கள் மகள் நியத்தி, 96 படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் எதிர்காலத்தில் நல்ல நடிகையாக வருவார்; சொல்லப் போனால், படத்தில் உங்களை விட சிறப்பாக அவர்தான் நடித்திருக்கிறார்.

அதை அவரிடம் சொல்லி, உற்சாகப்படுத்துங்கள் என்றார். உடனே, நியத்தி, இங்கு தான் இருக்கிறார். நீங்களே அவரிடம் சொல்லி விடுங்கள் என சொல்லி, நியத்தியை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தேன். பின், நடிகர் விஜய்யும், நியத்தியும் கிட்டதட்ட இருபது நிமிடங்கள் வரை பேசினர். பின், இருவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த அளவுக்கு நடிகர் விஜய் பந்தா இல்லாத மனிதர். பிகில் படத்தில் நடிகர் விஜய்க்கு அக்காவாக நடிக்கிறேன். அது பெருமையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

மூலக்கதை