ஹீரோ -படத் தலைப்பு; மோதிக் கொள்ளும் இரு நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
ஹீரோ படத் தலைப்பு; மோதிக் கொள்ளும் இரு நிறுவனங்கள்

படத்தின் கதை என்னுடையது என, இயக்குநர், உதவி இயக்குநர்களுக்கிடையே சண்டை நடக்கும். பஞ்சாயத்து கோர்ட் வரைக்கும் செல்லும். அப்படித்தான், உதவி இயக்குநர் செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை என்னுடையது எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்குப் போட்டிருக்கிறார். வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குறிப்பிட்ட நாளில் பிகில் படம் ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், திட்டமிட்டபடி வரும் அக்., 25ல் படம் ரிலீசாகும் என அறிவித்து, அதற்கான பணிகளில் படக் குழு தீவிரமாக இருக்கிறது.


இது ஒருபுறம் இருக்க, ஒரே பெயரை இரு தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் புதுப் படத்துக்கு ஒரே பெயரைச் சூட்டிக் கொள்ள, திரையுலகில் பெரும் சிக்கலாகி இருக்கிறது. நடிகர்கள் சிவ கார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா ஆகிய இருவர் நடிக்கும் படத்திற்கும் 'ஹீரோ' என தலைப்பிடப்பட்டிருக்கிறது. இதனாலேயே புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சர்ச்சைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, நேற்று மாலை சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹீரோ. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர். டிசம்பர் 20ல், இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிக்க, ஆனந்த் அண்ணாமலை இயக்கும் படத்திற்கும் 'ஹீரோ' என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் படத்தின் பூஜை போடப்பட்ட அன்றே, ஹீரோ தலைப்புக்கான சர்ச்சைகளும் துவங்கின. நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து ஹீரோ படத்தை எடுக்கும், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் ஹீரோ தலைப்புக்கு, தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கே உரிமை கொடுத்திருப்பதாக அறிவித்தது. ஆனால், கே.ஜே.ஆர் நிறுவனமோ, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டது. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

சமீபத்தில், இது தொடர்பாக, ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம், ஹீரோ படத்தின் தலைப்பு தங்களுக்குச் சொந்தமானது என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தங்களுக்கே உரிமை அளித்து கடிதம் கொடுத்திருப்பதால், அந்த பெயரை நாங்கள் மட்டுமே தகுதிபடைத்தவர்; மீறி பயன்படுத்தினால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். கூடவே, கடந்த 2018லிலேயே, ஹீரோ படத் தலைப்பை பதிவு செய்திருக்கிறோம். அதனால், ஹீரோ தலைப்பை பயன்படுத்தி, தாங்கள் புதுப் படம் எடுக்கக் கூடாது. இது தொடர்பாகவும், கடந்த ஏப்ரலிலேயே, தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தும், குறிப்பிட்ட தலைப்பை, சிவகார்த்திகேயன் படக் குழுவினர் பயன்படுத்தி வருவது, தவறானது என்றும் வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம், பல வழிகளில் ஹீரோ தலைப்புக்கு முயன்று வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர், கடந்த 18 மாலை வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், கே.ஜே.ஆர். நிறுவனம், இந்தத் தலைப்பில் உறுதியாகயிருப்பது தெரிகிறது. இந்தப் பிரச்னை எப்படி போய் முடியும் என புரியாமல் திரையுலகில் பலரும் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

மூலக்கதை