ஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை

தினமலர்  தினமலர்
ஒழுக்கத்தை கற்றுக்கொள் : இளம் ஹீரோவுக்கு மேஜர் ரவி அறிவுரை

மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருப்பது இளம் நடிகர் ஷேன் நிகம் என்பவருக்கும் அவர் நடித்து வரும் 'வெயில்' என்கிற படத்தின் தயாரிப்பாளர் ஜோபி என்பவருக்கும் இடையேயான பிரச்சனைதான்.. தன்னை தயாரிப்பாளர் மிரட்டுவதாக கூறி ஷேன் நிகம் புகாரளிக்க, தயாரிப்பாளர் ஜோபியோ, அவர் இன்னும் அதிக சம்பளம் கேட்டு படத்தில் நடிக்க மறுக்கிறார் அதன் காரணமாகவே என் படத்திற்கு தேவைப்படும் கதாபாத்திரத்திற்காக வளர்த்திருந்த தலைமுடி கெட்டப்பை மாற்றி இன்னொரு படத்திற்கு தயாராகி விட்டார் இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம் என தனது தரப்பு நியாயத்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான மேஜர் ரவி முதலில் ஷேன் நிகம் பக்கம் நியாயம் உள்ளதாக நினைத்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். ஆனால் தயாரிப்பாளர் ஜோபியின் பிரஸ்மீட்டில் அவர் பேசியதை தொடர்ந்து, அவர் பேச்சில் உள்ள நியாயம் பற்றி ஷேன் நிகமிடம் பேசுவதற்காக பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அவர் எடுக்கவே இல்லையாம். இதனால் கடுப்பாகிப் போன மேஜர் ரவி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரு வளரும் நடிகனாக உனக்கு என் ஆதரவு இருக்கிறது தம்பி.. அதேசமயம் திரையுலகில் முதலில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நீ கற்றுக் கொண்டால்தான் அடுத்த நிலைக்கு உயர முடியும்.. தயாரிப்பாளர் ஜோபியின் பேச்சில் இருக்கும் நியாயம் எனக்கு புரிகிறது. தயாரிப்பாளர்களிடம் கொடுத்த வாக்குப்படி நீ நடந்து கொண்டால் உனக்கு தொடர்ந்து எப்போதும் என் ஆதரவு உண்டு” என்று கூறியுள்ளார் மேஜர் ரவி.

மூலக்கதை