நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு: துணை ராணுவம், போலீஸ் குவிப்பு...24ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு: துணை ராணுவம், போலீஸ் குவிப்பு...24ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை:  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த வாக்குச்சாவடி மையங்களிலும் துணை ராணுவத்துக்கு உதவியாக 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

இந்த வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தயார் செய்து வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர்.

இரண்டு தொகுதியிலும் கடந்த சில நாட்கள் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த இரு தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்ததால், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேறினர்.

அங்கு பொதுக்கூட்டங்கள், பிரசாரம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ், இணையதளம் மூலமாகவும் பிரசாரம் செய்யக்கூடாது.

 இதை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

இந்த தொகுதிகளில், 24, 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நேற்று முதல் வாக்குப்பதிவு நாளான 21ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. நாங்குநேரியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 389 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 3 பேர் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 042 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் 1,11,721 ஆண் வாக்காளர்கள், 1,11,710 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2,23,456 பேர் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 50 மையங்கள் பதட்டமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதன்படி 299 வாக்குச்சாவடிகளில் 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

விக்கிரவாண்டி தொகுதியில் 3,286 பேர், நாங்குநேரியில் 1,475 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரண்டு தொகுதியிலும் 6 கம்பெனி துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நாள் அன்று பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இரண்டு தொகுதியில் மொத்தமுள்ள 574 வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் வேப்கேமரா மற்றும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாளை பதிவாகும் வாக்குகள், மாலை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 24ம் தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும்.

மகாராஷ்டிரா, அரியானா :

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை (அக்.

21) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

பாஜ-சிவசேனா கூட்டணி மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.   அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் ஆளும் பாஜ பெரும்பாலான இடங்களில் போட்டியிடுகிறது.

சில இடங்களை மட்டும் உதிரி  கட்சிகளுக்கு அளித்துள்ளது.

இம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல், பலமுறை அரியானாவுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், இம்மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடி பாஜ கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.   இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் செய்தார். வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்பட உள்ளன. மேற்கண்ட் சட்டப்பேரவை தொகுதிகளுடன் நாடு முழுவதும் 18 மாநிலங்களில் காலியாக உள்ள 64 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தோதல் நடைபெறுவதால், அந்த மாநிலங்களில் நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுற்றது.


.

மூலக்கதை