தமிழகம் முழுவதும் வேகமாக பரவுகிறது டெங்கு ஒரே நாளில் 4 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் வேகமாக பரவுகிறது டெங்கு ஒரே நாளில் 4 பேர் பலி

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘அட்மிட்’: காய்ச்சலை தடுக்க முடியாமல் திணறும் சுகாதாரத்துறையை கண்டித்து போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்த சிறுவனின் உறவினர்கள் சுகாதாரத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காய்ச்சலை தடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் அவ்வப்போது சிக்குன் குன்யா, டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்ச்சல்கள் பரவுவது வழக்கம். குறிப்பாக மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் டெங்கு பரவி 100க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், இந்தாண்டும் தமிழக மக்களை டெங்கு மிரட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் பரவி வரும் இந்த காய்ச்சலுக்கு சிறுவர், சிறுமியர் தான் அதிகளவில் இறக்கின்றனர்.



கடந்த சில வாரங்களாக பலர் உயிரிழந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 4 பேர் டெங்குவுக்கு பலியாகி உள்ளது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இறந்தவர்கள் விவரம் வருமாறு:  தர்மபுரி: பென்னாகரம் அடுத்த கள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், மலர்மதி தம்பதியின் மகன் அவினாஷ் (8).

பென்னாகரம் அருகே அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 13ம் தேதி அவினாஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். பின்னர், கடந்த 16ம் தேதி பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்தபோது, மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால், 19ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, அவினாஷ் நேற்று உயிரிழந்தான்.

இதனிடையே, தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான், தங்களது மகன் உயிரிழந்ததாக கூறி, அவினாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று மாணவனின் சடலத்துடன் கள்ளிபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சப் கலெக்டர் ஆர்த்தி, டிஎஸ்பி மேகலா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பென்னாகரம் பகுதியில் அனைத்து இடங்களிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பின்னர், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சென்னை: பெரியமேடு, ஸ்டிங்கர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆனந்த்.

இவரது மகள் அக்சதா. அப்பகுதியிலுள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்நிலையில் அவளுக்கு நேற்று திடீரென உடல்நிலை சரியில்லாததால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

அங்கு பரிசோதித்த போது சிறுமி இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறும்போது டெங்கு காய்ச்சலால் சிறுமி இறந்ததாக குற்றம்சாட்டினர்.   ஆனால், மருத்துவமனை தரப்பில் சிறுமிக்கு சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு இருந்ததாகவும், அதனால் இறந்ததாகவும் தெரிவித்தனர். இதுபோல, புழல் அடுத்த புத்தாகரம் புருஷோத்தமன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன்.

கூலி தொழிலாளி.   இவரது மூத்த மகன் அரவிந்தன் (10). தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.

2வது மகன் அருணாசலம் (8). அதே பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.

இருவருக்கும் கடந்த 17ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு மேல்சிகிச்சைக்காக  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அரவிந்தன் மற்றும் அருணாசலத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை அரவிந்தன் பரிதாபமாக இறந்தான். அருணாசலத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர்: ஏமூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி வைஷ்ணவி.

அப்பகுதியில்  4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் இவருக்கு தொடர் காய்ச்சல்  ஏற்பட்டது.

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   பின்னர் பெற்றோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து  சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி இறந்ததாக பெற்றோர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர திருச்சியில் 5 பேர் டெங்கு அறிகுறியுடன், நூற்றுக்கணக்கானோருக்கு காய்ச்சல், நாகை மாவட்டத்தில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர், மர்ம காய்ச்சலால் 50 பேர், கரூரில் டெங்கு அறிகுறியுடன் ஒருவர் மர்ம காய்ச்சலால் 10 பேர்,  பெரம்பலூரில் டெங்கு அறிகுறியுடன் 10 பேர், அரியலூரில் டெங்கு அறிகுறியுடன் ஒருவர், திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு அறிகுறியுடன் அஜித்குமார் (20) என்ற ஒருவர் மற்றும் 51 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



பலி எண்ணிக்கையை மறைக்கும் முயற்சி: தமிழகம் முழுவம் தற்போதைய நிலவரப்படி 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அரசு தரப்பில் இந்தாண்டு இதுவரை 3 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உண்மையான மதிப்பீடு கூடுதலாக இருக்கும். அதை அரசு மறைக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மறைக்கும் விஷயத்தில் ஈடுபடுவதை அரசு கைவிட்டு, டெங்குவை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களிடம் நிலவும் பீதியை போக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலவேம்பு கசாயம் தடுக்குமா? :  தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: நிலவேம்பு கசாயம், பப்பாளி  இலைச்சாறு தட்டணுக்களின் எண்ணிக்கையினை உயர்த்த பயன்படுகிறது என சித்த மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

நாங்களும் அரசு பரிந்துரை செய்துள்ளதால், நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.   ஆனால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது பலன் தராது. காரணம், அந்த நோயாளி பெரும்பாலும் மயக்க நிலையில் இருப்பார்.

உடல் மிகவும் சோர்வுற்று  இருக்கும்.

அப்போது பப்பாளி இலை சாறு, நிலவேம்பு கசாயம் கொடுத்தால் ஒவ்வாமை அல்லது  வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்து கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

எனவே, அந்த  நேரங்களில் வழங்க அனுமதியில்லை. சாதாரண காய்ச்சல் உள்ள நேரங்களிலும், உடலில் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கவும் பப்பாளி இலை சாறும், நிலவேம்பு கசாயமும் உதவும்.

இதனை தொடர்ந்து சாப்பிடுவதும்  தவறு.

டாக்டர்கள் ஆலோசனைப்படி சாப்பிடலாம் என்றனர்.

.

மூலக்கதை