வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 16 மாவட்டங்களில் கனமழை...தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 16 மாவட்டங்களில் கனமழை...தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை மழை  பொழிவு இருக்கும்.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பருவமழை  காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் நேற்றிரவு முதல் விட்டு, விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கோயம்பேடு,  எழும்பூர், வடபழனி,  தி. நகர் தண்டையார்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இந்த மழை காரணமாக சென்னை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளான கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, வேளச்சேரி மெயின்ரோடு, ஜிஎஸ்டி சாலை, ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.   இதனால், சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.   இந்த மழை காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 4 ஏரிகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 14098 ஏரிகள், 89 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.   இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் தேவாலா 13 செ. மீ, சிவலோகம் (கன்னியாகுமரி) 12 செ. மீ, வேடச்சந்தூர் 7 செ. மீ, குமாராபாளையம், சத்தியமங்கலம், சங்கரன்கோயில், மேட்டுபாளையம் தலா 6 செ. மீ, அம்பாசமுத்திரம், நத்தம், பவானி, தேன்கணிக்கோட்டை தலா 4 செ. மீ, கோத்தகிரி, பொள்ளாச்சி, அரவக்குறிச்சி, குன்னூர், சூளகிரி, நன்னிலம், தர்மபுரி, சூலூர் தலா 3 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த மழை அடுத்து வரும் 3 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மயைம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலைஆய்வு மையம் கூறியதாவது: தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால், தமிழகத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்; விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்.

குறிப்பாக, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மாநகரை பொறுத்தவரையில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.   மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் கேரள மற்றும் கர்நாடக மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


.

மூலக்கதை