வாகன சில்லரை விற்பனை செப்டம்பரில் சரிவு

தினமலர்  தினமலர்
வாகன சில்லரை விற்பனை செப்டம்பரில் சரிவு

புதுடில்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன சில்லரை விற்பனை, 20.1 சதவீதம் சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன சில்லரை விற்பனை, 20.1 சதவீதம் குறைந்து, மொத்தம், 1.58 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.பண்டிகை காலம் மற்றும் அதை ஒட்டி இதுவரை இல்லாத சலுகைகள் என சாதகமான பல அம்சங்கள் இருந்தபோதிலும், அவை விற்பனை வளர்ச்சிக்கு உதவவில்லை.இதுவே, கடந்த ஆண்டு செப்டம்பரில், 1.98 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகின.இருசக்கர வாகனங்களின் சில்லரை விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 12.1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பரில், 12.49 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த செப்டம்பரில், 10.98 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.மதிப்பீட்டு காலத்தில், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 18.5 சதவீதம் சரிவடைந்துள்ளது.மாறாக, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை மட்டும், 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது.வாகன துறைக்கு உதவும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தபோதும், அவை சில்லரை விற்பனையில் பிரதிபலிக்கவில்லை.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை