மிகை லாபம் ஈட்டும் வணிகர்கள் ஆறு புகார்கள் மட்டுமே பதிவு

தினமலர்  தினமலர்

ஜி.எஸ்.டி., பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், வணிகர்கள் அதிக லாபத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தமிழகத்தில் இதுவரை ஆறு புகார்கள் மட்டுமே பதிவாகி உள்ளன.ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி, வணிகர்கள் அதிக லாபம் அடைவதை தடுப்பதற்காக, ‘தேசிய மிகை லாப தடுப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது.

பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டால், கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி.,யும் குறைக்கப்பட வேண்டும். ஆனால், வரி குறைக்கப்பட்ட பொருட்களை, பழைய விலைக்கே விற்பதால், அந்த பயன் பொதுமக்களுக்கு சேர்வதில்லை.எனவே, ஜி.எஸ்.டி.,யின் முழுமையான பயன்கள், மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக, இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் மிக சொற்ப புகார்களே, வணிகர்கள் மீது வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, மிகை லாப தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., பயனை வழங்காமல், அதிக லாபம் சம்பாதிப்பதில் ஈடுபடுவதாக, இதுவரை ஆறு வணிக நிறுவனங்கள் மீது மட்டுமே புகார்கள் வந்துள்ளன. இவை பொதுமக்கள் அளித்த புகார்கள்.இந்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, உண்மை இருந்தால், மாநில நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அவர்கள் அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பர். ஆனால், தமிழகத்தில் இதுவரை யார் மீதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

மூலக்கதை