கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் அலைமோதல்! பண்டிகை நெருங்குவதால் பாதுகாப்பு தீவிரம்

தினமலர்  தினமலர்
கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் அலைமோதல்! பண்டிகை நெருங்குவதால் பாதுகாப்பு தீவிரம்

கோவை:தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பொருட்கள் வாங்க, கோவையில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது; போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் வரும், 27ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
புது துணிகள், பட்டாசு ரகங்கள், இனிப்புகள் வாங்கி, பண்டிகையை கொண்டாட, மக்கள் தயாராகி வருகின்றனர்.இன்னும் ஒரு வாரமே உள்ளதாலும், நேற்று மழை ஓய்ந்திருந்ததாலும், வியாபாரம் சூடுபிடித்தது; கடை வீதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் துணி, எலக்ட்ரானிக் பொருட்கள், இனிப்பு வாங்க கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் என, 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 'பிக்பாக்கெட்' ஆசாமிகளை பிடிக்க, 'மப்டி' உடையில் போலீசார் ரோந்து சென்றனர்.
ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோட்டில், ஆறு இடங்களில், உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, 'பைனாகுலர்' மூலமும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணித்தனர். தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைத்துள்ளனர்.பொதுமக்கள் வசதிக்காக, ஆங்காங்கே தற்காலிக வாகன 'பார்க்கிங்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று, அபராதம் விதித்தபின், விடுவித்தனர்.களமிறங்கும் மாணவர்கள்போலீசார் கூறுகையில், 'விடுமுறை தினமான இன்று (20ம் தேதி) மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். உக்கடம் பகுதியில் மேம்பால பணி நடப்பதால், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதியில் வாகன போக்குவரத்தை தடை செய்ய இயலாது. போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசாருடன், கல்லுாரி மாணவர்களும் இணைந்து செயல்பட உள்ளனர்' என்றனர்.

மூலக்கதை