'கவியரசர் விருது' வழங்கும் விழா

தினமலர்  தினமலர்
கவியரசர் விருது வழங்கும் விழா

சென்னை : கண்ணதாசன்- - விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில், 16வது, 'கவியரசர் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன்' விழா, நேற்று முன்தினம் மாலை, சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், குமாரராஜா முத்தையா அரங்கில் நடந்தது.

விழாவில், குமாரராணி மீனா முத்தையா, குத்துவிளக்கு ஏற்றினார். கண்ணதாசன் -விஸ்வநாதன் அறக்கட்டளை அறங்காவலர் நல்லி குப்புசாமி, வரவேற்றார்.விழாவில், 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனர் முரளிக்கு, 'கவியரசர் விருது' மற்றும் இசையமைப்பாளர் கணேஷ் கிருபாவுக்கு, 'மெல்லிசை மன்னர் விருது' வழங்கப்பட்டது.இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.'கண்ணதாசன் காண விரும்பிய சமுதாயம்' என்ற தலைப்பில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:தலைவர்களின் வாழ்க்கையை, கவிதை வரிகளால் எடை போட்டவர் கண்ணதாசன்.

காமராஜர் குறித்தும், நேரு மறைவு குறித்தும், அவர் எழுதிய கவிதை, பலரால் பாராட்டப்பட்டது. அதேபோன்று, அரசியல்வாதிகளை புகழ்ந்தும், தாக்கியும் கவிதை எழுதியது, அவருக்குரிய தைரியம். அவரின் பாடல்களில், சமூக சிந்தனை கொண்ட வரிகள் அதிகமாக இருக்கும். கண்ணதாசன், விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் ஆகியோர் காலத்து பாடல்கள் தான், தமிழ் சினிமாவின் பொற்காலம்.இவ்வாறு, அவர் பேசினார்.இறுதியாக, கணேஷ் கிருபா இசைக்குழுவினரின், கண்ணதாசன் - எஸ்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து படைத்த பாடல்கள் அடங்கிய, இன்னிசை கச்சேரி நடந்தது.விழாவில், கண்ணதாசன்- விஸ்வநாதன் அறக்கட்டளை தலைவர் லட்சுமணன், பொருளாளர் எஸ்.பி.முத்துராமன், காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை