தடைபட்டது! அரசலாறு முகத்துவாரம் துார் வாரும் பணி... பழுதான இயந்திரம் சீரானால் தான் தொடரும்

தினமலர்  தினமலர்
தடைபட்டது! அரசலாறு முகத்துவாரம் துார் வாரும் பணி... பழுதான இயந்திரம் சீரானால் தான் தொடரும்

காரைக்கால்:காரைக்கால் அரசலாற்று முகத்துவாரம் துார் வாரும் இயந்திரம் பழுதானதால், பணி தடைபட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கிளிஞ்சல்மேடு, காளிகுப்பம், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினம் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். விசைப்படகுகள் அரசலாறு முகத்துவாரத்தின் வழியாக கடலுக்கு சென்று வருகின்றன. இந்த முகத்துவாரம் மணல் துார்ந்து போய் இருப்பதால், படகுகள் கடந்து செல்வதில் சிரமம் உள்ளது. சில சமயங்களில் படகு சேதமாகி, மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசலாறு முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து, முகத்துவாரத்தை ரூ.60 லட்சம் செலவில், 400 மீட்டர் நீளம். 30 மீட்டர் அகலத்திற்கு துார் வார அரசு நடவடிக்கை எடுத்து, கடந்த 1ம் தேதி பணியை துவக்கியது. தினம் இரவு, பகலாக டிரஜ்ஜர் இயந்திரம் மூலம் துார் வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், கருங்கலில் மோதியதில் இயந்திரம் பழுதானது. அதையடுத்து துார் வாரும் பணி தடைபட்டது. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் முடித்து விரைவில் மீண்டும் துார் வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று ஊழியர்கள் கூறினர்.

மூலக்கதை