1964ம் ஆண்டே உறுதி அளித்தும் 370ஐ ரத்து செய்யாமல் காங். தவறிவிட்டது: பிரசாரத்தில் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
1964ம் ஆண்டே உறுதி அளித்தும் 370ஐ ரத்து செய்யாமல் காங். தவறிவிட்டது: பிரசாரத்தில் மோடி பேச்சு

ரிவாரி: ‘‘நாடாளுமன்றத்தில் கடந்த 1964ம் ஆண்டே உறுதி அளித்த போதிலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய காங்கிரஸ் தவறிவிட்டது,’’ என அரியானா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். நாளை நடைபெறும் அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்காக, ரிவாரி பகுதியில் நேற்று நடந்த கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த 1964ம் ஆண்டே விவாதம் நடந்தது. 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனால், காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. இந்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும் என காங்கிஸ் தலைவர்கள் கைகட்டி வாக்குறுதி அளித்தனர். பிறகு அந்த விஷயம் கண்டுகொள்ளப்படவில்லை. எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டது? நாட்டுக்காக கடந்த 70 ஆண்டுகளில் உயிர்நீத்த வீரர்கள் மற்றும் போலீசாருக்கு காங்கிரஸ் கட்சி எந்த நினைவிடமும் கட்டவில்லை. பா.ஜ அரசுதான் கட்டியது. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததும் பாஜ.தான். ஆனால், காங்கிரஸ் சுயநலன் பற்றி மட்டுமே கவலைப்பட்டது. ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தையும் பா.ஜ அரசுதான் அமல்படுத்தியது. அரியானாவில் மட்டும், இத்திட்டம் மூலம் வீரர்களுக்கு ₹900 கோடி வழங்கப்பட்டது. ராணுவத்தினருக்கு நவீன ஆயுதங்கள், ரபேல் போர் விமானங்கள், புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வாங்கியதும் பா.ஜ அரசுதான். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை