பொய் வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரம்: போலீசாரை பழிவாங்க 118 சொகுசு காரை திருடினார்... பெங்களூருவில் தமிழக வாலிபர் கைது

தினகரன்  தினகரன்
பொய் வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரம்: போலீசாரை பழிவாங்க 118 சொகுசு காரை திருடினார்... பெங்களூருவில் தமிழக வாலிபர் கைது

பெங்களூரு: பொய் வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த தமிழக வாலிபர்  ஒருவர், போலீசாரை பழிவாங்கும் வகையில் பெங்களூரு நகரில் 118 கார்களை  திருடினார். அவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் தொடர் கார் திருட்டு சம் பவம் தொடர்பாக  வாலிபர் ஒருவரை ஹுலிமாவு போலீசார் கைது  செய்தனர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்று  தெரிந்தது. ஆரம்பத்தில் பைக்குகளை திருடி வந்த இவர் மீது சென்னை  போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் ஜாமீன்  பெற்று வெளியே வந்த இவர், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி  போலீசாரை பழிவாங்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக சவால் விடும் வகையில்  சொகுசு கார்களை குறிவைத்து திருட தொடங்கினார். அதுமட்டுமின்றி முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என்று பெங்களூரு வந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பெங்களூரு மடிவாளா, ஹுலிமாவு, வயாலிகாவல்,  மைக்கோ லே அவுட் ஆகிய சரகங்களில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள், தனியார்  நிறுவனங்களின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை யுனிவர்சல்  கீயை பயன்படுத்தி திருடி வந்துள்ளார். இதுவரை 118 கார்கள் திருட்டு  வழக்கில் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. சமீபத்தில் பைக்கை திருடிக்  கொண்டு, ஹுலிமாவு சரகத்திற்குட்பட்ட பகுதியில் வந்தபோது, போலீசார் அவரை  மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் இவர் பெங்களூரு மட்டுமின்றி,  சென்னையில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததும் ஹுலிமாவு போலீசார் அவரை கைது செய்தனர். சோதனையில் இவரிடம் இருந்து ₹1.70  லட்சம் மதிப்பிலான 10க்கும் அதிகமான விலையுயர்ந்த கார்களை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர். பரமேஸ்வர் கொடுத்த தகவலின் பேரில்  அவரது கூட்டாளியான தமிழகத்தை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பவரை போலீசார்  கைது செய்துள்ளனர்.  கைதான இருவர் மீதும் ஹுலிமாவு போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர்.

மூலக்கதை