மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் தரையிறக்கம்: சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி

தினகரன்  தினகரன்
மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் தரையிறக்கம்: சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி

புதுடெல்லி: மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடினார். அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் முக்கிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலத்தில் உள்ள மகேந்திரகர்  பகுதியில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினார். அதை முடித்து கொண்டு ஹெலிகாப்டரில் அவர் டெல்லி திரும்பியபோது, மோசமான வானிலை காரணமாக டெல்லியில் தரையிறங்க முடியவில்லை. இதனால், அரியானாவில் ரிவாரி என்ற இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வானிலை சரியாகும் வரை சிறிது நேரம் காத்திருக்க பைலட் முடிவு செய்தார்.  அப்போது, மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த ராகுல், அவர்களுடன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். `வானிலை மேலும் மோசம் அடைந்ததால் ஹெலிகாப்டரில் செல்ல இயலாது’ என்று பைலட் கூறிய பின்னர், தரை மார்க்கமாக அவர் டெல்லி திரும்பினார்.இந்த வீடியோ அனைத்து இந்திய மகளிர் காங்கிரஸ் குழுவினரால் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பார்த்தவர்களில் சிலர் அவரை, `மனிதருள் மாணிக்கம்’ என்றும், `நீங்கள் ஒரு சிறந்த தலைவர்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.மகேந்திரகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா ஹெலிகாப்டர்மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின் கடைசி நாள் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமத்நகர் மாவட்டத்தின் அகோல் பகுதிக்கு நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். அப்போது மழை பெய்ததால் மோசமான வானிலை காரணமாக பிற்பகல் 2.25 மணிக்கு நாசிக் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து 40 நிமிட தாமதத்துக்கு பிறகு ஹெலிகாப்டர் அகமதுநகருக்கு புறப்பட்டு சென்றது.

மூலக்கதை