சைபீரியா தங்க சுரங்கத்தில் அணை உடைந்து 15 பேர் பலி

தினமலர்  தினமலர்
சைபீரியா தங்க சுரங்கத்தில் அணை உடைந்து 15 பேர் பலி

மாஸ்கோ : ரஷ்யாவில், தங்க சுரங்கத்தில் அணை உடைந்து, 15 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 4,000 கி.மீ., தொலைவில் உள்ள, சைபீரியா கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில், தங்க சுரங்கங்கள் அதிகம் உள்ளன.இங்குள்ள சேய்பா ஆற்றின் குறுக்கே, ஒரு தனியார் நிறுவனத்தால் போதிய பாதுகாப்பின்றி அணை கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே, சுரங்கத் தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது. இவர்கள் தற்காலிக வீடுகள் அமைத்து, குடியேறியுள்ளனர்.மழை காரணமாக, அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து, உடைந்தது. இதனால், குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. 15 பேர் நீரில் மூழ்கி இறந்தது, உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தவிர, 15க்கும் மேற்பட்டோர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

சைபீரியா மண்டல கவர்னர் அலெக்ஸாண்டர் உஸ் கூறுகையில், ''அப்பகுதியில், சட்டவிரோதமாக அணை கட்டப்பட்டுள்ளது. விபத்து நடந்த பின்னர் தான், அணை இருப்பதே தெரியவந்தது. குடியிருப்புகளில், 180 பேர் வசித்து வந்தனர். 80 பேர் மட்டுமே, விபத்து நடந்தபோது அப்பகுதியில் இருந்தனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட, 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன,'' என்றார்.

மூலக்கதை