'சிட்கோ' நிறுவனங்களுக்கு 3 நாள் கெடு! கொசுப்புழு அழிக்க வேண்டும்

தினமலர்  தினமலர்
சிட்கோ நிறுவனங்களுக்கு 3 நாள் கெடு! கொசுப்புழு அழிக்க வேண்டும்

திருப்பூர்:திருப்பூர், முதலிபாளையம் 'சிட்கோ' வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள், மூன்று நாட்களுக்குள் கொசுப்புழுக்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திலேயே, டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது, முதலிபாளையம் ஊராட்சி. அங்குள்ள 'தாட்கோ' மற்றும் 'சிட்கோ' வளாகங்களில், மழைநீர் நீண்ட நாள் தேங்கி, கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டுள்ளது.
சிட்கோ சுற்றுப்பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகம் என்பதால், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் குழு, தாட்கோ மற்றும் 'சிட்கோ' வளாகத்தை அலாசி பார்த்து, ஆய்வு செய்தது. 'தாட்கோ' வளாகத்தில் உள்ள பயன்படுத்தாத தண்ணீர் தொட்டிகளில், மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியானது கண்டறியப்பட்டது.
தொட்டிகளில் துளையிட்டு, மழைநீர் தேங்காமல் செல்வது போல் செய்யப்பட்டுள்ளது. 'சிட்கோ' வளாகத்தில் உள்ள, 189 நிறுவனங்களில், பெரும்பாலான நிறுவனங்கள், தேவையற்ற பொருட்களை தேக்கி, மழைநீர் தேங்க காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது.அனைத்து நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கிய, சுகாதாரத்துறை; டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, பி.டி.ஓ., கனகராஜ் உள்ளிட்டோர், டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நிறுவனமும், சுற்றுப்பகுதிகளில் உள்ள பயன்படாத பொருட்களை அகற்ற வேண்டும். மேற்கூரை மற்றும் சுற்றுப்பகுதியில், மழைநீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.தொடர் விடுமுறை நாட்களில் மழை பெய்தாலும், தண்ணீர் தேங்காதபடி ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், கொசுப்புழு உற்பத்தியானால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை