'மாஜி' சிதம்பரம் , மகன் கார்த்தி மீது குற்றப் பத்திரிகை

தினமலர்  தினமலர்
மாஜி சிதம்பரம் , மகன் கார்த்தி மீது குற்றப் பத்திரிகை

புதுடில்லி:'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம், 74, மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற அனுமதி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்காக, சிதம்பரத்தின் மகனும், தற்போதைய காங்., - எம்.பி.,யுமான கார்த்திக்கு தொடர்புள்ள நிறுவனங்கள் பலனடைந்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, சிதம்பரம், கார்த்தி, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாறி, சிதம்பரத்துக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.

இதன் அடிப்படையில், ஆகஸ்ட், 21ல், சிதம்பரத்தை, சி.பி.ஐ., கைது செய்தது. தற்போது அவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்க துறையும், சிதம்பரத்தை சமீபத்தில் கைது செய்தது. சிறையில் உள்ள சிதம்பரத்திடம், ஏழு நாள் விசாரணை நடத்த, அமலாக்க துறைக்கு, டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த வழக்கில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி லால் சிங் முன், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஆடிட்டர் பாஸ்கர ராமன், நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகி சிந்துஸ்ரீ குல்லார், சிறு, குறு தொழில் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் அனுப் கே புஜாரி ஆகியோர் உட்பட, 15 பேரின் பெயர்கள், இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

இதில், அனுமதியை மீறி அன்னிய முதலீடு பெற அனுமதி அளித்தது உள்ளிட்ட, பல பிரிவுகளின் கீழ், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாமின் கிடைக்குமா?ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி ஆர்.பானுமதி தலைமை யிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:இந்த வழக்கில் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதில், எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்பது தான் மத்திய அரசின் கொள்கை. ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் இருந்து, சில தகவல்கள் வர வேண்டியுள்ளது. எனவே, சிதம்பரத்துக்கு ஜாமின் அளித்தால், அவர், சாட்சிகளை அச்சுறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட சிலர், ஏற்கனவே, நம் நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன. சிதம்பரத்துக்கு ஜாமின் அளித்தால், அவரும் தப்பிச் செல்லலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

சிதம்பரம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ''சிதம்பரத்துக்கு ஜாமின் அளித்தால், அவர், சாட்சிகளை மிரட்டுவார் என, சி.பி.ஐ., தரப்பில் கூறுவது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு,'' என்றார். இதையடுத்து, இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை