அதிர்ச்சி: நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை: எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்

தினமலர்  தினமலர்
அதிர்ச்சி: நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை: எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்

புதுடில்லி, :நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில், 38 சதவீதம் தரமற்றது என்பது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்பு, நாடு முழுவதும், 6,432 பால் மாதிரிகளை சேகரித்து, அதன் தரம் குறித்து ஆய்வு நடத்தியது.

பாதுகாப்புநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 1,103 நகரங்களில், கடந்தாண்டு, மே - அக்டோபர் மாதங்களில், இந்த பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.இதில் தெரிய வந்த முடிவுகள் குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தலைவர் பவன் அகர்வால் கூறியுள்ளதாவது:

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அவற்றில், 38 சதவீதம் தரமற்றது என தெரிய வந்துள்ளது. மேலும் இவற்றில், 10.4 சதவீத பால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் பொருந்தவில்லை. நாங்கள் நடத்திய ஆய்வில், கலப்படம் என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால், தரமற்ற பால் விற்பனை தொடர்பான பிரச்னையே அதிக அளவில் உள்ளது தெரிய வந்துள்ளது.

விதிமுறைமொத்த பால் மாதிரிகளை ஆய்வு செய்ததில், 12 சதவீத மாதிரிகளில் மட்டுமே, கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், கேரள மாநிலங்களில் தான் கலப்படம் அதிகம் உள்ளது. தரமற்ற பால் விற்பனை தான், மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. அதிலும், முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் தான், அதிக அளவில் தரமற்றவையாக உள்ளன. இதை, ஒருபோதும் ஏற்க முடியாது. 'அப்லாக்டாக்ஸின் எம் - 1' என்ற ரசாயன பொருள், நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான அம்சங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் காரணமாக, பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட பால் தரமற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், டில்லி, கேரள மாநிலங்களில் பயன்படுத்தப்படும் பாலில் தான், 'அப்லாக்டாக்ஸின் எம் - 1' என்ற ரசாயனம் அதிகம் உள்ளது. கால்நடைகள் சாப்பிடும் தீவனங்களில் செய்யப்பட்ட கலப்படம் காரணமாக, அவற்றின் பால் தரமற்று போயுள்ளன. பாலில் செய்யப்பட்ட கலப்படம், இதற்கு காரணமல்ல. கால்நடைகளின் தீவனத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய, நம் நாட்டில் போதிய ஆய்வகங்கள் இல்லை என்பதும், இதற்கு முக்கிய காரணம்.

தரமற்ற பால் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, சம்பந்தப் பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை, 2020 ஜனவரிக்குள் வகுக்கும்படியும் கூறப்பட்டுள்ளது. தரமற்ற பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள், எங்கள் ஆய்வு முடிவுகளை ஏற்க மறுத்து, நீதிமன்றங்களுக்கு செல்லக் கூடும். ஆனாலும், எப்.எஸ்.எஸ். ஏ.ஐ., நிர்ணயித்துள்ள தர விதிமுறைகளுக்கு, அவை கட்டுப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை