பாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
பாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை

புதுடில்லி :பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில், பாகிஸ்தானை, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., முடிவு செய்துள்ளது.

'பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கறுப்பு பட்டியலில் சேர்ப்போம்' எனவும், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கறுப்பு பட்டியல்சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, 'ஜி - 7' அமைப்பை சேர்ந்த நாடுகளால், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, 1989-ல் உருவாக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர், பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளை, கறுப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என, இரு வகைகளாக பிரிக்கிறது. கறுப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அவற்றுடன், உலக நாடுகள், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் வைத்துக்கொள்ளாது.

கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. இவை, உலக நாடுகளிடம் இருந்து, கடன் பெறுவதில் சிக்கல் இருக்கும்; பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், கடந்த ஆண்டில், எப்.ஏ.டி.எப்., பாகிஸ்தானை, கிரே பட்டியலில் சேர்த்தது.

எச்சரிக்கை'பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பண மோசடிகளை, 2019 அக்டோபருக்குள், முற்றிலும் நிறுத்த வேண்டும்; இல்லாவிடில், ஈரான் மற்றும் வடகொரியாவுடன் சேர்த்து, கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெறும்' என, எப்.ஏ.டி.எப்., எச்சரித்திருந்தது. இந்நிலையில், பாரிசில், எப்.ஏ.டி.எப்., அமைப்பின், கூட்டம் நடந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.பண மோசடி மற்றும், பயங்கரவாத நிதியுதவிகளைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி, கூட்டத்தில் ஆய்வு செயய்யப்பட்டது.

பாகிஸ்தானின், பொருளாதார விவகாரத்துறை அமைச்சர், ஹம்மத் அசார், பயங்கரவாதத்திற்கு எதிராக தங்கள் நாடு எடுத்து வரும் நடவடிக்கைகளை தெரிவித்தார். சீனா, துருக்கி ஆகிய நாடுகள் பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டின.சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத், தன் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்க, பாகிஸ்தான் அனுமதித்ததை மேற்கோள்காட்டி, பாகிஸ்தானை, கறுப்பு பட்டியலில் சேர்க்க, இந்தியா வலியுறுத்தியது.இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, பாகிஸ்தானை, கிரே பட்டியலில் வைத்திருக்க, எப்,.ஏ.டி.எப்., முடிவு செய்துள்ளது.

விதிமுறை
இது பற்றி, இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:எப்.ஏ.டி.எப்., அமைப்பு நிர்ணயித்த, 27 விதிமுறைகளில், ஐந்து விதிமுறைகளை மட்டுமே, பாகிஸ்தான் கடைப்பிடித்துள்ளது. அதனால், அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, பாகிஸ்தானை, கிரே பட்டியலில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, நிதி உதவியைத் தடுத்தல், பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தல், கைது செய்தல் ஆகியவற்றை அடுத்த நான்கு மாதங்களுக்குள், பாகிஸ்தான் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து, செயலில் இறங்காவிட்டால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சீனாவால் தப்பித்த பாக்.,ஒரு நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்க்க, குறைந்தபட்சம், மூன்று நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். எப்.ஏ.டி.எப்., கூட்டத்தில், பங்கேற்ற, 200க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகளில், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க, சீனா, துருக்கி, மலேஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க, எப்.ஏ.டி.எப்.,யில் முடியவில்லை.

இதையடுத்து, எப்.ஏ.டி.எப்., பாகிஸ்தானை, நான்கு மாதங்களுக்கு கிரே பட்டியலில் நீட்டித்து, கடும் எச்சரிக்கை விடுத்தது. சர்வதேச அளவில், இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானை ஆதரிப்பது, சீனாவின் வழக்கமாக உள்ளது. இம்முறையும், அதை செய்துள்ளது.இது பற்றி, இந்திய பிரதிநிதி ஒருவர் கூறுகையில், 'வரும், நான்கு மாதங்களில், பாக்., நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதை யாரும் தடுக்க முடியாது.

சீனா தெரிவிக்கும் ஆதரவால் தான், காஷ்மீர் பிரச்னை பற்றி புலம்பும் பாகிஸ்தான், சீனாவில், முஸ்லிம்கள் மீது எடுக்கப்பட்டு வரும் அத்துமீறல்களை கண்டு கொள்ளாமல் உள்ளது' என்றார்.

மூலக்கதை