புரோ கபடி பைனலில் இன்று டெல்லி - பெங்கால் மோதல்

தினகரன்  தினகரன்
புரோ கபடி பைனலில் இன்று டெல்லி  பெங்கால் மோதல்

அகமதாபாத்: புரோ கபடி தொடரின் இறுதிப் போட்டியில்  டெல்லி தபாங் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. புரோ கபடியின் 7வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 16ம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதியில்  தபாங் டெல்லி அணி   44-38 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூர் புல்ஸ் அணியை வீழத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 37-35 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணியை போராடி வென்று பைனலுக்கு முன்னேறியது. இந்த இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. அதிலும் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த  அணிகளே இறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.டெல்லி அணி லீக் சுற்றில் 85 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது (22 போட்டி, 15 வெற்றி, 4 தோல்வி, 3 சமன்). பெங்கால் வாரியர்ஸ் 22 போட்டியில் 14 வெற்றி, 5 தோல்வி, 3 சமனுடன் 83 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது. இந்த அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறியதுடன், அவற்றிலும் வென்று சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக பைனலில் மோத உள்ளன. டெல்லி அணியில்  நவீன்குமார், ரவீந்திர பெஹல், சுரேந்திர நர்வால், விஜய்,  ஆல் ரவுண்டர் சந்திரன் ரஞ்சித் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பெங்கால் அணியில் மனீந்தர் சிங் காயம் காரணமாக விலகியிருப்பது சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும்  பிரபஞ்சன், ஜீவாகுமார், சுகேஷ் ஹெக்டே, ரிங்கு நர்வால், நபிபக்‌ஷ் ஆகியோர் மனீந்தர் சிங் இல்லாததே தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடுகின்றனர். இரு அணிகளுமே கோப்பையை முத்தமிட வரிந்துகட்டுவதால், அகமதாபாத் இகேஏ அரங்கில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் பைனலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்.

மூலக்கதை