3வது டெஸ்ட் இன்று தொடக்கம் ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

தினகரன்  தினகரன்
3வது டெஸ்ட் இன்று தொடக்கம் ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

ராஞ்சி: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 3வது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அடுத்து புனேவில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.முதல் டெஸ்டில் மயாங்க் அகர்வால் (215), ரோகித் ஷர்மா (176, 127), புஜாரா (81) பேட்டிங்கில் மிரட்ட, பந்துவீச்சில் அஷ்வின், ஷமி, ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வழிவகுத்தனர். இரண்டாவது டெஸ்டில் கேப்டன் விராத் கோஹ்லி (254*), மயாங்க் 108, புஜாரா 58, ரகானே 59, ஜடேஜா 91 ரன் விளாசினர். பந்துவீச்சில் அஷ்வின், ஷமி, உமேஷ், ஜடேஜா விக்கெட் வேட்டை நடத்த, தென் ஆப்ரிக்கா எதிர்ப்பின்றி சரணடைந்தது.இந்த தொடரில் இந்திய அணி 502/7 டிக்ளேர், 323/4 டிக்ளேர், 601/5 டிக்ளேர் என ஒரு முறை கூட ஆல் அவுட்டாகாதது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சி, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் ஹாட்ரிக் வெற்றியுடன் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா (200 புள்ளி), இந்த போட்டியிலும் வென்று 40 புள்ளிகளை முழுமையாகப் பெற்றாக் முன்னிலையை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.அதே சமயம் ஆறுதல் வெற்றி அல்லது குறைந்தபட்சமாக டிரா செய்ய தென் ஆப்ரிக்க அணியும் வரிந்துகட்டுகிறது. ‘ஸ்டெயின், அம்லா, டி வில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவது சாத்தியமில்லை’ என்று தங்களின் தோல்விக்கு கேப்டன் டு பிளெஸ்ஸி காரணம் சொல்லி இருந்தாலும், தொடர்ச்சியாக 3வது தோல்வியை தவிர்க்க அந்த அணி கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம். டீன் எல்கர், டி காக், பவுமா, டு பிளெஸ்ஸி ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ரபாடா, பிலேண்டர், நோர்ட்ஜே வேகக் கூட்டணியும் பெரிதாக சாதிக்க முடியாத நிலையில், முன்னணி ஸ்பின்னர் கேஷவ் மகராஜ் காயம் காரணமாக விலகி உள்ளது தென் ஆப்ரிக்காவுக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), மயாங்க் அகர்வால், ரோகித் ஷர்மா, செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், விருத்திமான் சாஹா, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, ஷுப்மான் கில். தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி (கேப்டன்), தெம்பா பவுமா, தியூனிஸ் டி புருயின், குவின்டான் டி காக், டீன் எல்கர், ஸுபேர் ஹம்ஸா, கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், செனூரன் முத்துசாமி, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெர்னான் பிலேண்டர், டேன் பியட், காகிசோ ரபாடா, ரூடி செகண்ட்.

மூலக்கதை