ஆய்வுக் கூட்டம்! துவங்கும் வடகிழக்கு பருவமழைக்கு ... ஆயத்தப் பணிக்கான முன்னெச்சரிக்கை

தினமலர்  தினமலர்
ஆய்வுக் கூட்டம்! துவங்கும் வடகிழக்கு பருவமழைக்கு ... ஆயத்தப் பணிக்கான முன்னெச்சரிக்கை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கண்காணிப்பு அதிகாரி, வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமை தாங்கி, பேசியதாவது;கடலுார் மாவட்டத்தில், ஆதிவராக நல்லுார் தடுப்பணை, வீராணம், பெருமாள் ஏரி, மலட்டாறு துார் வாருதல், திருச்சோபுரம் அருவாமூக்கு திட்டம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.நெடுஞ்சாலைத்துறை சார்பில், விக்கிரவாண்டி - கும்பகோணம் ரோடு பிரிவு, கடலுார் - சிதம்பரம் பிரிவு, சிதம்பரம் - திருச்சி ரோடு நில எடுப்பு பிரச்னைகள், சாலை அகலப்படுத்தும் இடத்தில், வீராணம் ஏரி சென்னை குடிநீர் குழாய் இடமாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை, விருத்தாசலம் பகுதிகளில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் குறித்தும், பரங்கிப்பேட்டை - விருத்தாசலம் ரோடு பராமரிப்பு பணிகள், புதுக்கூரைப்பேட்டை விஜயமாநகரம் நில பட்டா விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக பெருமாள் ஏரி, பூவாணிக்குப்பம் புதிய வடிகால் மதகினை பார்வையிட்டு, என்.எல்.சி., நிதி மூலம் துார் வார ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப் கலெக்டர்கள் விசுமகாஜன், பிரவீன்குமார், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், துணை கலெக்டர் ஷாகிதா பர்வீன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் (நீர்வள ஆதாரம்) சாம்ராஜ், மணிமோகன், வேளாண் இணை இயக்குனர் முருகன், தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜாமணி, வேளாண் உதவி இயக்குனர் பூவராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை