உறை கிணறுகளில் கிடைக்கும் குடிநீர்.. அதிகரிப்பு! வைகை ஆற்றில் நீர்வரத்து எதிரொலி

தினமலர்  தினமலர்
உறை கிணறுகளில் கிடைக்கும் குடிநீர்.. அதிகரிப்பு! வைகை ஆற்றில் நீர்வரத்து எதிரொலி

மதுரை : பருவமழை எதிரொலியாக வறண்டிருந்த மதுரை வைகை ஆற்றில் ஒரு வாரமாக நீர்வரத்துள்ளதால் உறைகிணறுகளில் நீர் ஊறி மாநகராட்சிக்கு கூடுதலாக கிடைக்க துவங்கியுள்ளது.

வைகை அணையில் பாசனத்திற்காக கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை வைகையில் படிப்படியாக நீரின் அளவு அதிகரித்தது. நேற்று வெள்ளம் ஏற்பட்டது. இரு தடுப்பணைகள், நீர்ப்பிடிப்பு பகுதியில் தேங்கிநின்ற கழிவுநீரை அடித்து சீறிப்பாய்ந்தது.

வைகையில் நீர்வரத்து தொடர்வதால் நகரில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. கோடையில் வறண்ட ஆற்றுப்படுகை உறை கிணறுகளில் தற்போது மீண்டும் நீர் ஊறத் துவங்கியுள்ளது. இவ்வுறை கிணறுகளில் 5 மாதங்களாக சொட்டுநீர் இல்லை. இதனால் மாநகராட்சிக்கு கிடைத்த குடிநீரில் 48 எம்.எல்.டி., வரை பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது நீர் ஊறியதால் உறைகிணறுகளில் இருந்து மீண்டும் மாநகராட்சி தண்ணீர் எடுக்க துவங்கியுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், ''ஆற்றில் நீர் வரத்து ஏற்படும் முன் வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் 126 எம்.எல்.டி., குடிநீர் கிடைத்தது. இப்போது உறைகிணறுகளில் இருந்தும் நீர் கிடைக்கிறது. இதன்மூலம் கூடுதலாக 21 எம்.எல்.டி., பெறமுடிகிறது. இதன் அளவு மேலும் அதிகரிக்கும்,'' என்றார்.

கண்காணிப்பில் வைகை:
வடகிழக்கு பருவமழை பேரிடரை தடுக்கும் பொருட்டு அனைத்துத்துறையினர் அடங்கிய கண்காணிப்பு குழுவை கலெக்டர் வினய் அமைத்துள்ளார். தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் இக்குழுவினர் உஷாராகியுள்ளனர். கரையோர மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

மூலக்கதை