வளர்ந்து வரும் இந்தியா: நிர்மலா சீதாராமன்

தினமலர்  தினமலர்
வளர்ந்து வரும் இந்தியா: நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன்: உலக அளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதியம் எனப்படும் ஐ.எம்.எப்., சமீபத்தில் கருத்துக்கணிப்பு வெளியிட்டது. அதில், இந்தியாவின் நடப்பு பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது என்றும், மத்திய அரசு எடுத்துவரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளினால், 2020ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் ஐஎம்எப் தெரிவித்திருந்தது.

ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ஐஎம்எப், கருத்துக்கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் குறைத்து வெளியிட்டுள்ளது. ஆனால், வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டிருக்கும் நாடுகளில் இன்னும் இந்தியா உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தோடு இந்தியாவை ஒப்பிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

ஐஎம்எப் கணிப்பின்படி இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் 6.1 சதவீதமாக தான் இருக்கிறது. ஆனால், இவர்களின் கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர வேண்டும், இன்னும் வேகமாக வளரவேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். உலக அளவில் மோசமான சூழலிலும் இந்தியா தொடர்ந்து வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மூலக்கதை