கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமாவின் டாப் 50 படங்கள் திரையீடு

தினமலர்  தினமலர்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமாவின் டாப் 50 படங்கள் திரையீடு

இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் மிகப்பெரியது கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா. இந்த ஆண்டு 50வது பொன்விழா ஆண்டும் சேர்ந்திருப்பதால் வழக்கத்தை விட பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்காக விழாக்குழுவினர் ஒவ்வொரு மாநிலத் தலைநகருக்கும் சென்று திரைப்படத் துறையினரை நேரில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள். அதன்படி சென்னைக்கும் வந்தார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரைப்படவிழா இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் சைதன்யா பிரசாத் பேசியதாது: இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் விழா முக்கியத்துவம் வாய்ந்தது. இது 50 வது ஆண்டு விழா. வழக்கமாக 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படும். ஆனால் இந்த ஆண்டு திரைகளை அதிகப்படுத்தி சுமார் 300 படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படவிழா ஜூரியாக ஆஸ்கர் விருது கமிட்டியின் முன்னாள் சேர்மன் ஜான் பெய்லீ இசைந்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றும் சுமார் 20 ஜூரி உறுப்பினர்களும் சர்வதேச அளவில் பரந்த நோக்குள்ள தங்களது படைப்புத்திறனுக்காக போற்றப்படும் சிறப்புடையவர்கள்.

இந்தியன் பனோரமாவில் இடம்பெற்ற 23 திரைப்படங்கள் திரையிடப்படும். கூடுதல் சிறப்பாக கடந்த 50 ஆண்டுகால திரைப்பட விழா வரலாற்றில் இடம்பிடித்த மிகவும் சிறப்புடைய 50 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இவ்விழாவில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் 'கோல்டன் பீகாக்' விருதுடன், பிராந்திய மொழி வாரியாக ஒரு சிறந்த படத்தை தேர்வு செய்து, அதற்கென ஒரு சிறப்பு விருதும் வழங்கப்பட உள்ளது. என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆப் கோவாவின் துணை சேர்மன் திரு சுபாஷ் படேல், இயக்குனர் பார்த்திபன், பிரமிட் நடராசன், கலைப்புலி தாணு, ஜேஎஸ்கே சதீஷ், எல் சதீஷ், அருள்பதி, டி சிவா, தனஞ்செயன், ஏவிஎம் சண்முகம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை