நேபாளம் வழியாக 5 தீவிரவாதிகள் ஊடுருவல்: தீபாவளியை சீர்குலைக்க சதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நேபாளம் வழியாக 5 தீவிரவாதிகள் ஊடுருவல்: தீபாவளியை சீர்குலைக்க சதி

புதுடெல்லி: தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆக.

5ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பாதுகாப்பு முகாம்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பின்னர், அதிகபட்சமாக தீவிரவாத அச்சுறுத்தல் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது தேசிய புலனாய்வு முகமை விடுத்துள்ள எச்சரிக்கையில், ‘இந்தியா - நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள கோரக்பூரில், 5 தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

அவர்களது செல்போன் உரையாடல்களை இடைமறித்துக் கேட்டதன் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது. டெல்லிக்கு வந்து சேர்ந்த பிறகு, காஷ்மீரில் உள்ள தீவிரவாத ஆதரவாளர்களை வரவழைத்து, தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்’ என்று எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
அதுவும், வருகிற தீபாவளி கொண்டாட்டத்தின்போது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புலனாய்வு மற்றும் உளவு தகவலையடுத்து, நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வரும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள பல பாதுகாப்பு தளங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், ‘பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாப்பு தளங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.

இந்திய விமானப்படை பஞ்சாபில் பதான்கோட் மற்றும் ஜம்மு உள்ளிட்ட விமான தளங்களை ஆரஞ்சு எச்சரிக்கையில் வைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக் கோட்டிலும், சர்வதேச எல்லையிலும் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனர்.

பண்டிகை காலங்களில் ஒரு பெரிய தீவிரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை