நடவடிக்கை எடுக்கிறாயா இல்லையா?: பாக்.,கிற்கு இறுதிக்கெடு

தினமலர்  தினமலர்
நடவடிக்கை எடுக்கிறாயா இல்லையா?: பாக்.,கிற்கு இறுதிக்கெடு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள், பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 'கறுப்பு பட்டியலில்' வைக்கப்படும் என, எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
பண மோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்த்து, 1989ம் ஆண்டில் நிறுவப்பட்டது, எப்,.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு. ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமை இடமாக வைத்து செயல்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், கடந்த ஆண்டில், பாகிஸ்தானை, 'கிரே' பட்டியலில், எப்.ஏ.டி.எப்., சேர்த்தது. 'பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கைகளை, 2019 அக்டோபருக்குள் நிறுத்த வேண்டும்; இல்லாவிடில், ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெறும்' என, எப்.ஏ.டி.எப்., எச்சரித்திருந்தது.

பாரீசில், எப்.ஏ.டி.எப்., அமைப்பின், மூன்று நாள் கூட்டம், நடந்தது. சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, ஹபீஸ் சயீத், தன் கணக்குகளில் இருந்து நிதியை எடுக்க, பாகிஸ்தான் அனுமதித்ததை மேற்கோள்காட்டி, பாகிஸ்தானை, கறுப்புபட்டியலில் சேர்க்க, இந்தியா வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பிப்.,2020க்குள் தனது முழு செயல்திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். முழுமையான திட்டத்தின் மூலம் பாகிஸ்தானால், அதன் செயல் திட்டத்தில் முழு அளவிலும் குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றம் செய்யப்படாவிட்டால், கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுக்கும். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க தவறினால், பாகிஸ்தானுடனான வணிக உறவுகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு தங்கள்நிதி நிறுவனங்களுக்கு உறுப்பு நாடுகள் ஆலோசனை வழங்க வேண்டும். எப்ஏடிஎப் அமைப்பு தெரிவித்த 27 நடவடிக்கைகளில் 5 மட்டுமே பாகிஸ்தான் எடுத்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எப்ஏடிஎப் தலைவர் ஷியான்மின் லியூ கூறுகையில், பாகிஸ்தான் வேகமாக அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020 பிப்.,க்குள் நடவடிக்கை எடுக்க தவறினால், 'கறுப்பு பட்டியலில்' சேர்க்கப்படும் என்றார்.

மூலக்கதை