ஜெயலலிதா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்

தினகரன்  தினகரன்
ஜெயலலிதா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்

புதுடெல்லி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது  கூறியதாவது, வழக்கறிஞர் வில்சன் மற்றும்  உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குமணன் ஆகியோருடன் சேர்ந்து சிபிஐ அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்ததாக தெரிவித்துள்ளார். அதில், 2016, 2017ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 முறை இடைத்தேர்தல் நடந்தது. 2017ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தான் வெற்றிபெற்றதாக குறிப்பிட்டார். 2016ம் ஆண்டிலும் தான் வேட்பாளராக போட்டியிட்டதாக அவர் கூறினார். அப்போது, தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பார்ம் ஏ , பார்ம் பி படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த பார்ம்களில் கட்சி பொதுச்செயலாளரின் கையெழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்த ஆளும்கட்சியான அதிமுக ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கியிருந்தனர். அதற்கு காரணமாக அவர் உடல்நிலை நிலை சரியில்லை என கூறியிருந்தனர். அதில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மயக்கமான நிலையில் இருந்ததாக கூறியிருந்தனர். இதையடுத்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி அன்று அவர் இறந்ததாக அறிவித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாத நேரத்தில், அவரின் கைரேகையை வாங்கியது மோசடியானது என குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்காக தொடர்ந்ததாக தெரிவித்தார். அதில், 2016ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் பார்ம் ஏ, பார்ம் பி படிவங்களில் அட்டஸ்டேட் இருக்காது. படிவம் பி- யில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தாரா என்பது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கு, உடைந்தையாக 2016ம் ஆண்டு செயல்பட்டு வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தான் காரணம் என குற்றம் சாட்டினார். பணபலத்தை கொண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது திமுக தான் என கூறினார். உயர்நீதிமன்ற தீர்ப்பில் உடன்பாடு எட்டப்படவிலை என்றால் அதிமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளோம். அதில், தேர்தல் மோசடிக்கு உடந்தையாக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி, அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி, அதிமுகவின் அன்றைய அவைத்தலைவராக இருந்த மதுசூதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது\' என தெரிவித்தார்.

மூலக்கதை