மராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்

தினகரன்  தினகரன்
மராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்

மும்பை: மராட்டியம் மற்றும் அரியானாவில் நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுவதால் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 288 தொகுதிகளை கொண்டுள்ள மராட்டியத்தில் ஆளும் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே முக்கிய போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை கைப்பற்ற வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு வருகின்றனர். 90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. அரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர். இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறுகிறது. இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இன்று மராட்டிய மாநிலத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதே போல் அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவர் அரியானாவின் மஹேந்திரகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அவருடன், மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மூலக்கதை