ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழரை விடுவிக்க கவர்னர் மறுப்பு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழரை விடுவிக்க கவர்னர் மறுப்பு?

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, அவர்கள் விடுதலையை கவர்னர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

அப்போது, அவர் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர்.

ஆனால், கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்தது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அவர்களை விடுதலை செய்ய 161வது பிரிவின் கீழ் தமிழக அரசு, மாநில கவர்னர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் மத்தியில் இந்த கோரிக்கைகள் வலுவடைந்தன.

போராட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என மத்திய அரசு கூறியது. இதுபற்றி கவர்னரிடம் பரிந்துரைத்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறிவிட்டது.

இந்த நிலையில், 7 பேர் விடுதலை குறித்து 2018 ஏப்ரலில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அந்த தீர்மானம் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே 2014 பிப்ரவரி, 2016 மார்ச்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் அளிக்கப்பட்டது. ஆனால், தீர்மானம் மீது கவர்னர் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார்.

இதனால், 7 பேரையும் விடுவிக்க கோரி, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். தமிழக அமைச்சர்களும் பேட்டி அளிக்கும்போது 7 பேர் விடுதலை பற்றி தாங்களும் வலியுறுத்தி வருவதாக கூறினர்.

அதுபோல 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ெதரிவித்தார்.

இந்நிலையில் சட்ட நிபுணர்களின் கருத்தை பெற கவர்னர் முயற்சித்து வருவதாகவும், அதனை பொறுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என கூறப்பட்டது. 7 பேரின் விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என கவர்னரிடம் மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. அப்படிப்பட்ட நேரத்தில் கவர்னர் மத்திய அரசின் நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் சுயமாக முடிவு எடுப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இதற்கிடையே விக்ரவாண்டி தேர்தல் பிரசாரத்தின் போது, ராஜிவ்காந்தி கொலை பற்றி சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சீமான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் 7 பேரை விடுவிக்க தமிழக கவர்னர் திடீரென இன்று எதிர்ப்பு தெரிவித்தாகவும் செப். 2018ல் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கவர்னரின் இந்த முடிவு தமிழக அரசுக்கும், அமைச்சரவைக்கும் எழுத்து பூர்வமாக இதுவரை அளிக்கப்படவில்லை. அவர் வாய்மொழியாக முதல்வரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை கோரி ஒன்றரை ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் திடீரென கவர்னர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசு மற்றும் எதிர்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னரின் இந்த செயல்பாட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை