நீலகிரி மாவட்டத்தில் கனமழை: ஊட்டி - மஞ்சூர் சாலையில் 10 இடங்களில் மண் சரிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீலகிரி மாவட்டத்தில் கனமழை: ஊட்டி  மஞ்சூர் சாலையில் 10 இடங்களில் மண் சரிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று துவங்கிய வடகிழக்கு பருவ மழையால் தீவிரம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் விட்டு, விட்டு பெய்த மழை, இரவு இடி, மின்னலுடன் கன மழையாக மாறியது. பின்னர் விடிய, விடிய பெய்த மழையால் மஞ்சூர் - ஊட்டி சாலையில் குந்தாபாலம், குண்டி தொரை முடக்கு, மெரிலேன்ட் ஆகிய இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இச்சாலையில் பல இடங்களில் மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தது. மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்ததால் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் மண் சரிவால் மேற்கொண்டு செல்ல முடியாமல் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் இன்று காலை மஞ்சூர் மற்றும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்களும் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது. இதை தொடர்ந்து சாலை பணியாளர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மஞ்சூர் பகுதியில் இருந்து ஜேசிபி இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு, சாலையில் விழுந்த மண் சரிவுகள், மரங்களை அகற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மேலும் கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர் பவானி உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவும், மரங்கள் சாய்ந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.

மஞ்சூர் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட பலத்த இடி, மின்னலால் மஞ்சூர் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

இதை தொடர்ந்து இன்று காலை மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு பெய்த கனமழையில் மஞ்சூர் அருகேயுள்ள கெத்தை, மாயா பஜார் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை உள்ளது. இது கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் அத்திக்கடவு பிரிவில் சாலை முடிவில் அமைந்துள்ளது.

இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சைலன்ட் வேலி, அப்பர்பவானி, மஞ்சூர், குந்தா மற்றும் கேரளாவின் சிறுவாணி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் சிறுவாணி, பவானி ஆறாக உருவெடுத்து, அத்திக்கடவு ஆற்றில் ஒருங்கிணைந்து பில்லூர் அணைக்கு வருகிறது. பில்லூர் நீராதார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அத்திக்கடவு ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வந்தது.

இதனால் அணையின் மொத்தமுள்ள 100 அடி நீர் மட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 90 அடி வரை நீர் மட்டம் இருந்தது. இது கடந்த 2 நாளாக அணைக்கு வரும் நீர் வரத்தால் மளமளவென உயர துவங்கியது.

இன்று காலை 5. 30 மணியளவில் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 97 அடியை எட்டியது.

இந்த நீர் மட்டத்தை எட்டினால் அணையின் பாதுகாப்பு கருதி, நீர் திறந்துவிடுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 5. 30 மணியளவில் பில்லூர் அணையில் இருந்து, அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும், 4 மதகுகள் வழியாக பில்லூர் அணையில் இருந்து செல்லும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் காலை 6 மணியளவில் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக இருந்தது.

அவையும் வெளியேறியது. இதையடுத்து காலை 8 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்தது.

இதனால் காலை 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் செல்கிறது. அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க, அதிகரிக்க பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இதனால் மேட்டுப்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் கரையோரமுள்ள நெல்லித்துறை, ஓடந்துறை, சிறுமுகை ஆகிய ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கு மேட்டுப்பாளையம் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை