இங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து  ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்

லண்டன்: இங்கிலாந்து - ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே புதிய  பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ்  ஜான்சன் தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான, பிரக்சிட்  ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு வரும்  31ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு உச்சி  மாநாடு  பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் நேற்று தொடங்கியது. அது, இன்றும் நடைபெறுகிறது. இதில்  ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 28 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரசல்ஸ் புறப்படும் முன்பாக,  பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  `இங்கிலாந்து - ஐரோப்பிய கூட்டமைப்பு குழுக்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மாபெரும் புதிய  பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது\'  எனக் கூறியுள்ளார். இதை நிறைவேற்ற, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்காக நாளை மறுநாள் கூட்டப்படும் இங்கிலாந்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பிரக்சிட்  ஒப்பந்தத்தை நிறைவேற்ற, உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை