நீதிமன்றம் உத்தரவால் மோசடி வழக்குகள் அதிகரிப்பு!

தினமலர்  தினமலர்
நீதிமன்றம் உத்தரவால் மோசடி வழக்குகள் அதிகரிப்பு!

மதுரை : மதுரை நகரில் நீதிமன்றம் உத்தரவுபடி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. வாரத்தில் குறைந்தது 2 வழக்குகள் பதிவாகின்றன.

இடம், பணம், நகை மோசடிக்காக போலீசில் புகார் செய்வது அதிகரித்துள்ளது. விசாரிக்கும் போலீசார் முடிந்தளவு வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்கின்றனர். போலீஸ் கமிஷனர், துணைகமிஷனர்கள் பரிந்துரைத்தால் வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால் தொடர் விசாரணையின்றி வழக்குகள் கிடப்பில் போடப்படுகின்றன. அதிகாரிகள் நெருக்கடி இருந்தால் மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் சிலர் நீதிமன்றங்களை நாடி வழக்குப்பதிவு செய்ய அனுமதி பெறுகின்றனர். சிலர் ஸ்டேஷனிற்கு கூட நேரில் புகார் தெரிவிக்காமல் ஆன்லைன், தபாலில் புகார் தெரிவித்துவிட்டு, அதை ஆதாரமாக வைத்து 'போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை' எனக்கூறி நீதிமன்ற உத்தரவு பெறுகின்றனர். இந்த வகையில் மோசடி தொடர்பாக நகரில் அக்.,1, 8ல் தலா இரு வழக்குகள், அக்.,9ல் ஐந்து, 11ல் ஒன்று, 14,15ல் தலா ஒரு வழக்கும் நீதிமன்றம் உத்தரவுபடி பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீசார் கூறுகையில், ''தொடர் விசாரணைக்கு ஆஜராகாமலும், எதிர்தரப்பை மிரட்டவும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பெறுகின்றனர். அந்த உத்தரவைகூட மனுதாரர்கள் நேரில் வழங்காமல் பதிவு தபாலில் அனுப்புகின்றனர். வழக்குப்பதிவு செய்ததை வைத்து அவர்களுக்குள் 'கட்டப்பஞ்சாயத்து' பேசி சமரசம் செய்து கொள்கின்றனர். ஆனாலும் சில வழக்குகளில் கைதும் செய்திருக்கிறோம்'' என்றனர்.

மூலக்கதை