கண்டிப்பு! தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை

தினமலர்  தினமலர்
கண்டிப்பு! தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை

பீட், :'ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டத்தை நீக்கிய நடவடிக்கையை கிண்டலடித்தவர்களை, வரலாறு கவனித்துக் கொண்டிருக்கிறது. தேச ஒற்றுமை விஷயத்தில், காங்கிரஸ் கட்சியினர் மத பேதம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 21ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. பீட் மாவட்டத்தில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:பீட் மாவட்ட மக்கள், பா.ஜ.,வின் மீது அதிக பற்று உடையவர்கள். முன்னாள் மத்திய அமைச்சர்களான, மறைந்த கோபிநாத் முண்டே, பிரமோத் மகாஜன் ஆகியோர், இந்த மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். தற்போது, முதல்வர் தேவேந்திர பட்னவிசும், அமைச்சர் பங்கஜாவும், இந்த மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர்.

வெற்றி கிடைக்கும்



எனவே, பீட் மாவட்டத்தில் மட்டுமல்ல, மஹாராஷ்டிரா முழுவதும், பா.ஜ., வுக்கு அபார வெற்றி கிடைக்கும். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டத்தை, மத்திய அரசு ரத்து செய்தது. நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இல்லை. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவை, காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலடிக்கின்றனர். அவர்களை வரலாறு கவனித்துக்கொண்டிருக்கிறது.

அவர்களை தண்டிக்க, மஹாராஷ்டிரா மக்களுக்கு, தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துஉள்ளது. மஹாராஷ்டிரா மக்கள், தேசப்பற்று மிக்கவர்கள். இந்த தேர்தலில், காங்கிரசையும், தேசியவாத காங்கிரசையும் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை தண்டிக்க முடியும். இந்த தேர்தல், பா.ஜ.,வின் வளர்ச்சி திட்டங்களுக்கும், காங்கிரசின் சுயநல அரசியலுக்கும் இடையே நடக்கும் ஒரு போர். கண்டிப்பாக, எங்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோருக்கு, ஊக்கம் தருகின்றனர்.

ரூ.2,000 கோடி டிபாசிட்



காங்கிரஸ் கட்சியினர் சிலர், 'காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் இருந்திருந்தால், மத்திய அரசு, சிறப்பு சட்டத்தை ரத்து செய்திருக்காது' என்கின்றனர். தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு போன்ற விஷயங்களை, ஹிந்து, முஸ்லிம் என, மதத்தின் அடிப்படையில் சிந்திப்பது நியாயம் தானா... காஷ்மீர் விஷயத்தில் மத பேதம் பார்ப்பது, எந்த வகையில் சரியாகும்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பா.ஜ.,வை எதிர்ப்பதில் களைப்படைந்து விட்டதாக கூறுகின்றனர். களைப்படைந்தவர்கள், மக்களுக்கு சேவை செய்வரா? மக்களுக்காக சேவை செய்யும் கட்சி, பா.ஜ., தான். விவசாயிகள் நலனுக்காக, அவர்களது வங்கி கணக்குகளில், ஏற்கனவே, 2,000 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் நாங்கள். எனவே, நாட்டுக்கு எதிரான சக்திகளை ஒழிப்போம். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.

அழகி வைத்த கோரிக்கை



வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில், 'மிஸ் கோஹிமா' அழகி போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், இறுதிச் சுற்றுக்கு தேர்வான அழகிகளிடம், நடுவர் குழுவினர், பல்வேறு கேள்விகளை கேட்டனர். விக்குனுவ் சச்சு, 18, என்ற இளம் பெண்ணிடம், 'பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பதாக இருந்தால், என்ன கேட்பீர்கள்' என, கேட்டனர்.

அதற்கு அந்த பெண், 'பசுக்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட, பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என கேட்பேன்' என்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சிலர், மாட்டிறைச்சி சாப்பிடுவோர், விற்பனை செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தான், 'பசு பாதுகாப்பை விட, பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்' என, மறைமுகமாக, அந்த பெண் குறிப்பிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த பெண்ணுக்கு, அழகி போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது.

நடிகை மகனுக்குபிரதமர் பாராட்டு



பாலிவுட் நடிகை குல் பனாங், 40, தன் ஒன்றரை வயது மகன் நிகிலுடன் இருக்கும் வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பத்திரிகையில் இருக்கும் மோடியின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி, 'அது யார்' என, தன் மகனிடம், அவர் கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை, 'மோடி' என, பதில் அளிக்கிறது.

ஆனால், 'மோடி என கூறக்கூடாது; மோடிஜி என கூற வேண்டும்' என, குல் பனாங் கூறுகிறார். பிரதமர் மோடி, இதை பாராட்டி, சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'குழந்தை நிகிலுக்கு, அற்புதமான வழிகாட்டி கிடைத்துள்ளார். வாழ்த்துகள். இது ஆச்சரியமான விஷயம்' என, தெரிவித்துள்ளார்.

மூலக்கதை