விலை கிடைக்காமல் தேங்கும் காடா துணி: உற்பத்தியை குறைக்கும் விசைத்தறிகள்

தினமலர்  தினமலர்
விலை கிடைக்காமல் தேங்கும் காடா துணி: உற்பத்தியை குறைக்கும் விசைத்தறிகள்

சோமனுார்;விசைத்தறி காடா துணி ரகங்களுக்கு, உரிய விலை கிடைக்காமல், தொடர்ந்து விலை குறைந்து வருவதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. பல ஆயிரம் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இவர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து, நுால் ரகங்களை கொள்முதல் செய்கின்றனர். அதை, சைசிங் மில்களில் கொடுத்து பாவு நுால்களாக மாற்றி, துணி உற்பத்தி செய்ய, விசைத்தறியாளர்களிடம் வழங்குகின்றனர்.உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்கள், பல்வேறு மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இத்தொழிலில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நுால் விலையும், துணி ரகங்களின் விலையும் குறைந்து வருகிறது. துணி ரகங்களின் விலை, மீட்டருக்கு, நான்கு ரூபாய் குறைந்துள்ளது. இதனால், உற்பத்தி செய்து வைத்திருக்கும் துணிகளை விற்கும் போது, பெருத்த நஷ்டத்தை உற்பத்தியாளர்கள் சந்திக்கின்றனர்.இதனால், துணிகளை விற்காமல் பலரும் இருப்பு வைத்துள்ளனர். சில நாட்கள் காத்திருந்து, விலை கிடைக்கும் போது விற்கலாம் என, முடிவு செய்துள்ளனர். இருப்பு வைத்திருக்கும் துணிகள், விற்கும் வரை, உற்பத்தியை குறைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக துணி விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. விலை உயரும் என எதிர்பார்த்தோம். ஆனால், பழைய நிலையே நீடிக்கிறது. துணி விலை குறைந்துள்ளதே தவிர இதுவரை உயரவில்லை.ரக வாரியாக துணிகளின் விலை குறைந்துள்ளது.
மீட்டருக்கு, 3 முதல் ரூ.4 வரை விலை குறைந்துள்ளதால், துணி ரகங்களை விற்க முடியாமல் தவிக்க வேண்டியுள்ளது. பல குடோன்களில் பல லட்சம் மீட்டர் துணி ரகங்கள் தேங்கியுள்ளன.தினமும், 2 கோடி மீட்டர் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில மாதங்களாக விற்பனை குறைந்துள்ளதால், இருப்பு அதிகரித்துள்ளது. இதனால், உற்பத்தியை குறைக்கும் முடிவில் இருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.உற்பத்தியை குறைக்கும் முடிவால், விசைத்தறியாளர்களுக்கு பாவு நுால் அனுப்புவதும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், விசைத்தறிகளின் இயக்கமும் குறைந்து தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை