குறைந்து வரும் பெரும் பணக்காரர்கள்; ஆச்சரியமளிக்கும் ஆய்வறிக்கை தகவல்கள்

தினமலர்  தினமலர்
குறைந்து வரும் பெரும் பணக்காரர்கள்; ஆச்சரியமளிக்கும் ஆய்வறிக்கை தகவல்கள்

மும்பை: நாட்டில், மிகப்பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, ‘கார்வி வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள மிகப்பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டில், 2.56 லட்சமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், இவர்களின் எண்ணிக்கை, 2.63 லட்சமாக இருந்தது என, கார்வி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.

அதிகரிப்பு:
இது குறித்து, அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது.முதலீடு செய்யும் நிலையில், உபரி தொகையாக, 7 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்கள், மிகப்பெரும் பணக்காரர்களாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இவர்களின் எண்ணிக்கை, 2.56 லட்சமாக குறைந்து விட்டது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இந்த மிகப்பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 2.63 லட்சமாக அதிகரித்திருந்தது.

இருப்பினும், இந்த 2.63 லட்சம் மிகப்பெரும் பணக்காரர்களின் மதிப்பு, 2018ல், 430 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, 2017ல், 392 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2018ல், இவர்களின் சொத்து வளர்ச்சி, 9.62 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 13.45 சதவீதமாக அதிகரித்திருந்தது.

முதலீடு:
மேலும், மிகப் பெரும் பணக்காரர்களின், 262 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்கள் நிதி சொத்துக்களாகவும், மீதி பிற நிலம் மற்றும் பொருட்கள் போன்ற சொத்துக்களாகவும், 60:40 என்ற விகிதத்தில் உள்ளது. நிதி பிரிவில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் சொத்துக்களில் அதிகளவு, நேரடி பங்குகளில் செய்யப்பட்டுள்ளன. 52 லட்சம் கோடி ரூபாய், பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால், வளர்ச்சியை பொறுத்தவரை, 6.39 சதவீதமாக, 2018ல் உள்ளது. இதுவே, 2017ல், 30.32 சதவீதமாக அதிகரித்திருந்தது.

நிலையான வைப்புத் தொகை மற்றும் பத்திரங்களில், 45 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி, 8.85 சதவீதமாகும். இதற்கு முந்தைய ஆண்டில் இப்பிரிவில் வளர்ச்சி, 4.86 சதவீதமாக இருந்தது. இதற்கடுத்து இன்சூரன்சில் அதிகளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வங்கி டெபாசிட்டுகளில், 34 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, 2018ல் செய்யப்பட்டுள்ளது. நிதிச் சந்தை முதலீடுகளை தவிர்த்து, பிற வகையான முதலீடுகளில் முதலிடம் பிடித்திருப்பது, தங்கம் மீதான முதலீடுகள் தான். கிட்டத்தட்ட, 80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், மதிப்பீட்டு காலத்தில் தங்கத்தில் செய்யப்பட்டு உள்ளன.

வளர்ச்சி:
அடுத்து, ரியல் எஸ்டேட் பிரிவில், 74 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், சொத்து மதிப்பு வளர்ச்சி, 7.13 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, 2017ல், 10.35 சதவீதமாக அதிகரித்திருந்தது.நிதி சந்தையில், தனிநபர் சொத்து வளர்ச்சியானது, நிதியாண்டு, 2024 வரை, ஒவ்வொரு ஆண்டும், 13.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டு, 798 லட்சம் கோடி ரூபாயாக பெருகும் என, கணிக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை