திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை ஒருநாள் முன்கூட்டியே துவங்கியுள்ளது. இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அவர்களது மத்தியில் சற்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில், ஆண்டின் சராசரி மழையளவு 876 மி. மீட்டர்.

இது கடந்த 10 ஆண்டுகளின் மொத்த சராசரியாகும். இதில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையே விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் மட்டத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

இந்நிலையில், ஆண்டின் மொத்த மழையில் 50 சதவீதமே மழை பெய்ததால், மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி விவசாயம் பாதித்ததோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலை துாக்கியது. இந்தாண்டு, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வந்ததோடு, குடிநீர் பிரச்னையில் அல்லாடி வந்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முதல் துவங்கி, அவ்வப்போது மழை பெய்து வருவதால், விவசாயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை, விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக பூந்தமல்லியில் 61 மி. மீட்டரும், குறைந்தபட்சமாக ஆர். கே. பேட்டையில் 7 மி. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மழையளவு (மி. மீட்டரில்) விவரம்: பூந்தமல்லி- 61, செம்பரம்பாக்கம்- 51, ஜமீன் கொரட்டூர்- 47, திருவள்ளூர்- 36, தாமரைப்பாக்கம்- 29, திருத்தணி- 28, சோழவரம்- 27, கும்மிடிப்பூண்டி- 26, பொன்னேரி- 20, செங்குன்றம்- 17, ஊத்துக்கோட்டை- 15, பள்ளிப்பட்டு- 10, திருவாலங்காடு- 9, பூண்டி - 8, ஆர். கே. பேட்டை- 7. மொத்தம்- 391 மி. மீட்டர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றிரவில் இருந்து  பரவலாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம்  ரங்கசாமி குளம், கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு,  ரெட்டை மண்டபம், ஒலிமுகமது பேட்டை,  செட்டி தெரு, பூக்கடை சத்திரம், காந்தி ரோடு போன்ற பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.   இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர்.

மாணவர்கள் நனைந்தபடி பள்ளிக்கு  சென்றனர். பெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர்,  மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம்,  செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி,   தாம்பரம், திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வர தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மில்லி மீட்டர்) விவரம்: காஞ்சிபுரம்- 25. 60, பெரும்புதூர்- 9. 20, உத்திரமேரூர்- 20, வாலாஜாபாத்- 7, திருப்போரூர்- 11, செங்கல்பட்டு- 17. 40, திருக்கழுக்குன்றம்- 14. 20, மாமல்லபுரம்- 67. 20, மதுராந்தகம்- 13, செய்யூர்- 4. 20, தாம்பரம்- 44.

.

மூலக்கதை