இன்ஸ்பெக்டருக்கு ரூ19 லட்சம் லஞ்சம் கொடுத்த முருகன்: நகைக்கடை கொள்ளை வழக்கு விசாரணையில் பகீர் தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்ஸ்பெக்டருக்கு ரூ19 லட்சம் லஞ்சம் கொடுத்த முருகன்: நகைக்கடை கொள்ளை வழக்கு விசாரணையில் பகீர் தகவல்கள்

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதி 29 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன், தஞ்சையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளான கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு, சுரேஷ் செங்கம் நீதிமன்றங்களில் சரணடைந்தனர். முருகனை பெங்களூரு போலீசார் கஸ்டடி எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்து ஆற்றங்கரையோரம் புதைத்து வைத்திருந்த சுமார் 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.

நகை கடை கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் கோசலராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே மணிகண்டனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 4. 8 கிலோ நகைகளை திருச்சி கோர்ட்டில் ஒப்படைத்துள்ளார்.

அதேபோல் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து திருச்சி ஆற்றங்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மீட்டு வர இன்ஸ்பெக்டர் கோசலராமன் பெங்களூரு சென்றுள்ளார். அதோடு முருகனை கஸ்டடியில் எடுத்து வருவதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே போலீஸ் கஸ்டடி முடிந்து முருகனை போலீசார் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மற்றொரு திருட்டு வழக்கில் காவல் கோரி போலீசார் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, மேலும் 9 நாள் கஸ்டடி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெங்களூரு போலீசார் முருகனை ரகசிய இடத்தி–்ல் வைத்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே முருகனுக்கு வழங்கப்பட்ட கஸ்டடி இன்று தான் முடிகிறது. ஒரு நாள் முன்னதாக நேற்றே பெங்களூரு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் அவனை கஸ்டடி எடுத்துள்ளனர்.

ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் பல இடங்களில் தங்க நகைகளை புதைத்து வைத்திருப்பதாக முருகன் பெங்களூரு போலீசாரிடம் கூறி உள்ளான். திருச்சி போலீசார் கஸ்டடி எடுத்து விட்டால், அந்த நகைகளை பறிமுதல் செய்ய முடியாது.

எனவே முந்திக்கொண்டு முருகனை கஸ்டடி எடுத்து விட்டதாகவும், மீண்டும் முருகனுடன் பெங்களூரு போலீசார் ரகசியமாக தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கஸ்டடியில் உள்ள முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சுரேசிடம் திருச்சி போலீசார் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன் தினமும் புதுப்புது தகவல்களை போலீசாரிடம் தெரிவித்து வருகிறான்.

தற்போது அவன் தெரிவித்ததாக மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி சுரேசிடம் விசாரணை நடத்தும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி நம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 457 பவுனை மதுரையில் உருக்கி விற்றோம்.

சென்னையில் பணியாற்றும்இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ரூ19 லட்சத்தை எனது மாமா முருகள் கொடுத்தார். திருட்டு சம்பவத்தின் போது செல்போன் பயன்படுத்தினால், போலீசிடம் எளிதில் சிக்கி விடுவோம் என்பதால், செல்போன் மூலம் வாக்கி டாக்கியில் இணைப்பு ஏற்படுத்தி அதை பயன்படுத்தி வந்தோம்.

சென்னையில் இப்படித்தான் பல இடங்களில் கைவரிசை காட்டினோம். ஆனால் இதை சென்னை போலீசார் கண்டுபிடித்து விட்டதால், அந்த தொழில்நுட்பத்தை கைவிட்டோம்.

அதன்பிறகு இடுப்பில் கயிறு கட்டி கொள்ளையடிக்கும் டெக்னிக்கை பயன்படுத்தி வந்தோம்.

லலிதா ஜூவல்லரியிலும் அந்த டெக்னிக் படிதான் கொள்ளையடித்தோம். அதாவது கொள்ளையடிக்க உள்ளே நுழைபவர்களின் இடுப்பில் கயிறு கட்டி விடுவோம்.

அப்போது ஆட்கள் நடமாட்டமிருந்தால் வெளியில் இருந்து கயிறை இழுத்து சிக்னல் கொடுப்போம். இவ்வாறு சுரேஷ் தெரிவித்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

கர்நாடகா, தமிழக மாநிலங்களில் தனது வழக்கு உள்ள மாவட்டங்களில் உயர் போலீஸ் அதிகாரிகளை முருகன் தனது கைக்குள் வைத்திருந்தது சுரேசின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே திருவாரூரில் எஸ்பியாக இருந்த ஒருவருக்கு கார் பரிசளித்த முருகன், இப்போது ஒரு இன்ஸ்பெக்டருக்கு ரூ19 லட்சம் கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகளுக்கு முருகன் பணம் மற்றும் பரிசு பொருட்களை அளித்தது கோர்ட் பிறப்பிக்கும் பிடிவாரன்டுகளுக்காக தன்னைத்தேடி எந்த போலீசாரும் வரக்கூடாது, தனக்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என்பதற்காகத்தான் என்றும் கூறப்படுகிறது.

இதுபோல் மேலும் பல போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கி–்ல் பணம் மற்றும் நகைகளை முருகள் அள்ளிக்கொடுத்திருக்கலாம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

.

மூலக்கதை