தாமதமானதால் ஆத்திரம்: மாநகர பஸ்சை சிறைபிடித்த பயணிகள்: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தாமதமானதால் ஆத்திரம்: மாநகர பஸ்சை சிறைபிடித்த பயணிகள்: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை விவேகானந்தர் இல்லம் பஸ்நிறுத்தத்தில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை வழியாக மாதவரம் வரை மாநகர பஸ் (தடம் எண் 38 எச்) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்காக நேற்று மதியம் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருந்தனர்.

ஆனால், பல மணி நேரம் ஆகியும் பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், அவ்வழியாக வந்த மற்றொரு மாநகர பஸ்சை சிறைபிடித்து கோஷமிட்டனர். இதனால் அடுத்தடுத்து வந்த மாநகர பஸ்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் கண்டக்டர், டிரைவர்கள் பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பஸ் விடுவிடுக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,  “மாத்தூர் பால் பண்ணை எம்எம்டிஏ ஆகிய பகுதிகளில் வசிக்கும் நாங்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு வந்தோம்.

மீண்டும் வீட்டிற்கு செல்ல ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பல மணி நேரமாக காத்திருக்கிறோம். 38எச் பேருந்து இன்னும் வரவில்லை.

இதனால்தான் இவ்வழியாக வந்த மற்றொரு மாநகர பஸ்சை சிறைபிடித்தோம்.

எனவே, நோயாளிகளின் நலன்கருதி (தடம் எண் 38 எச்) மாநகர பேருந்தை முறையாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

.

மூலக்கதை