சென்னை ஜி.எச்.சில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை ஜி.எச்.சில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.   தமிழகத்தில் உள்ள அரசு மருத்துமனைகளில் முக்கியமானதாக சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளது. தமிழகத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இருந்து இங்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்த பின்னரே நல்ல தண்ணீர் தேங்கி அதன்மூலம் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்து டெங்கு பாதிப்பு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் 200 பேர் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 38 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நேற்று சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.

சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில், நிலைய மருத்துவ அலுவலர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் மருத்துவமனையின் நிர்வாக குழுவினர் பங்கேற்றனர். வட கிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் எங்கெல்லாம் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளது.

எந்ததெந்த இடங்களில் எல்லாம் சாக்கடை, மழை நீர் கால்வாய்கள் அடைத்துள்ளது அவற்றை சரிசெய்ய வேண்டிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் எங்கெல்லாம் மரங்கள் உள்ளது.

அவற்றில் எவை கனமழை பெய்தால் விழ வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை விடப்படும்பட்சத்தில் பெரிய மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவற்கான மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மருத்துவமனை உள்நோயாளிகள், மருத்துவக்கல்லூரி விடுதி மாணவர்கள் தேவையான உணவுப்பொருட்கள், உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் வழக்கத்தை விட கூடுதலாக இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுக்கு தடையில்லா மின்வினியோகம் வழங்கும் ஜெனரேட்டர்களுக்கான கூடுதல் டீசல் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திடீர் மின்தடை ஏற்படுவதை தடுக்க 3 சிப்ட்களில் மருத்துவமனை எலக்டிரீசியன்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது.

.

மூலக்கதை