40 இடங்களில் ஐடி ரெய்டு கல்கி சாமியாரிடம் ரூ35 கோடி சிக்கியது: 2வது நாளாக சோதனை தொடர்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
40 இடங்களில் ஐடி ரெய்டு கல்கி சாமியாரிடம் ரூ35 கோடி சிக்கியது: 2வது நாளாக சோதனை தொடர்கிறது

சென்னை: வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்த விவகாரத்தை தொடர்ந்து, கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கல்கி பகவான் மற்றும் அவரது மகனிடம் இருந்து கட்டுக்கட்டாக ரூ. 24 கோடி பணம், 9. 80 கோடி வெளிநாட்டு பணம் என மொத்தம் ரூ. 35. 30 கோடி பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு விஜயகுமார் சாதாரணமாக எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வந்தார்.

பின்னர், திடீரென 1989ம் ஆண்டு, `நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்’ எனத் தனக்குத்தானே பறை சாற்றிக் கொண்டார்.

பின்பு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் சிறிய அளவில் கல்கி ஆசிரமத்தை தொடங்கினார். இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருகின்றனர்.

தற்போது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

விஜயகுமார் குறுகிய காலத்தில் உலகளவில் பிரபலமடைந்தார். வசதி வந்த உடன் ஆந்திர மாநிலம் வரதயபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு  கல்கி ஆசிரமத்தை நிறுவினார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை தொடங்கி நடத்தி வருகிறார். கல்கி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு தியானத்தின் போது போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைப்பதாக  குற்றச்சாட்டு வெகு காலமாக உள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏழை, எளிய மக்களுக்கு அரசு அளித்த நிலம், வனத்துறைக்கு சொந்தமான நிலம் போன்றவற்றை கல்கி பகவான் ஆக்கிரமித்துள்ளதாக ஐதராபாத் நீதிமன்றத்தில் ஏராளமானோர் தொடர்ந்த வழக்கு  நிலுவையில் உள்ளது.

இந்த ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்று வெளி உலகிற்கு தெரியாத வகையில் இன்று வரை மர்மதேசம் போன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆசிரமத்தில் பல வெளிநாட்டு பெண் பக்தர்கள் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கல்கி ஆசிரமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக பணம் வந்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம் வெளிநாட்டு பக்தர்கள் பெயர்களில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல கோடி ரூபாயிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர சுவிஸ் வங்கியில் கல்கி ஆசிரம நிர்வாகிகள் பெயரிகளில் பல ஆயிரம் கோடி பணம் டெப்பாசிட் செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு சுவிஸ் வங்கியிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அந்த நாடு கொடுத்தது. அதில் கல்கி ஆசிரமங்களில் உள்ள நிர்வாகிகள் பெயர்களில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்தே கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என நாடு முழுவதும் உள்ள  கல்கி ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றில் இருந்த சோதனை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான இடங்களில் ேநற்று நடந்த சோதனையில் ஆசிரம நிறுவனரான கல்கி பகவான் அறையில் இருந்து மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ. 1. 50 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், கல்கி பகவான் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்தி வரும்‘கேப்பிடல் செல்டர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் மற்றும் கிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் ரூ. 24 கோடி இந்திய பணம் மற்றும் 9. 80 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர கல்கி தலைமை அலுவலகத்தில் இருந்து வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருந்து முக்கிய ஆவணங்களும் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த சோதனையில் மட்டும் கல்கி ஆசிரமங்கள் மற்றும் கல்கி பகவான் மகன் நடத்தும் நிறுவனங்களில் இருந்து ரூ. 35. 30 கோடி பணம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

ேமலும், இரண்டாவது நாள் சோதனையில் ரகசிய அறையில் கட்டிக்கட்டியாக தங்கம் மற்றும் வைர குவியல்களும், பல நூறு கோடிக்கு சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

.

மூலக்கதை