வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் முழுவதும் 5 நாள் மழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் முழுவதும் 5 நாள் மழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 5 நாட்கள் மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக அளவு காணப்பட்டது.

பின்னர், வடகிழக்கு பருவமழை தொடங்கும் இடைபட்ட காலத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்ததது.

ஆனால், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து முற்றிலுமாக விலகியதையடுத்து ஒரு நாளைக்கு முன்பாகவே நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழக கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக, வேலூர், அரக்கோணம், திருப்பூர், அவிநாசி, ஆட்டையம்பாளையம், சேயூர், திருவண்ணாமலை, வந்தவாசி, செம்பூர், தென்னாங்கூர், பாதூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகை, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சித்தணி, அரசூர், கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதலே கனமழை பெய்தது.

இதேபோல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. அதன்படி, திருப்போரூர், கேளம்பாக்கம், புழல், செங்குன்றம், சோழவரம், காரமடை, ஆர். கே. பேட்டை, பள்ளிப்பட்டு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை, பாரிமுனை, பூக்கடை, மண்ணடி, காசிமேடு, தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர், மாங்காடு, கிண்டி, ஈக்காட்டுத்தங்கல், தி. நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், தரமணி, வண்டலூர், வடபழனி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதேபோல், நகரின் முக்கியமான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

.

மூலக்கதை