ராஜூவ் காந்தி கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
ராஜூவ் காந்தி கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், 161வது சட்ட விதியின் கீழ் இந்த விவகாரத்தில் அவர் இறுதி முடிவை எடுப்பார் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசும் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக இன்னும் அவர் முடிவு எடுக்காததால், ஆளுநர் அலுவலகத்தில் தமிழக அரசின் பரிந்துரை  நிலுவையில் உள்ளது.மேற்கண்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘ராஜிவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள்  ஒரு தீர்க்கமான பதிலை வெளியிட வேண்டும். இல்லையேல், அரசியல் சாசனம் 435வது சட்ட விதியில் மாநிலத்திற்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசே அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும்’ என  குறிப்பிடப்பட்டது.  இதற்கிடையே, ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், நவம்பர் 5-ம் தேதி விசாரிப்பதாக  தெரிவித்துள்ளது.

மூலக்கதை