17 வயதில் இரட்டை சதம்! ஜெய்ஸ்வால் சாதனை

தினகரன்  தினகரன்
17 வயதில் இரட்டை சதம்! ஜெய்ஸ்வால் சாதனை

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 203 ரன் விளாசிய மும்பை அணி தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (17 வயது), மிக இளம் வயதில் ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.ஆலூர் கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த மும்பை அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஆதித்யா தாரே இணைந்து முதல் விக்கெட்டுக்கு 34.3 ஓவரில் 200 ரன் சேர்த்தனர். தாரே 78 ரன், சித்தேஷ் லாட் 32 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 203 ரன் (154 பந்து, 17 பவுண்டரி, 12 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 31, துபே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய ஜார்க்கண்ட் 46.4 ஓவரில் 319 ரன் குவித்து ஆல் அவுட்டானது. விராத் சிங் 100, சவுரவ் திவாரி 77, அனுகுல் ராய் 46, கேப்டன் இஷான் கிஷண் 34, குமார் தியோப்ரத் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். மும்பை பந்துவீச்சில் தவால் குல்கர்னி 5, ஷிவம் துபே, சித்தேஷ் லாட் தலா 2, ஷாம்ஸ் முலானி 1 விக்கெட் வீழ்த்தினர்.17 வயதில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ள ஜெய்ஸ்வால், நடப்பு தொடரில் தான் மும்பை அணிக்காக அறிமுகமானார். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட இவர் சிறிய குடிசை வீட்டில் வசிப்பதுடன் தந்தையுடன் சேர்ந்து பானி பூரி வியாபாரம் செய்கிறார். இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால் 44, 113, 22, 122, 203 ரன் விளாசி திறமையை நிரூபித்துள்ளார். இவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக பிரபலங்கள் பலரும் கணித்துள்ளனர்.விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதம் விளாசிய 3வது வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக சஞ்சு சாம்சன் (212), கர்ண் வீர் கவுஷல் (202) இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர். கடந்த ஆண்டு நடந்த யு-19 ஆசிய கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிராக ஜெய்ஸ்வால் 113 பந்தில் 85 ரன் விளாசி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை